சிறிலங்கா தளபதிகளுக்கு தடைவிதித்தவர் கொழும்பு வருகிறார்
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மீது தடைகளை விதிப்பதில் முக்கிய பங்கு வகித்த, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக உலகளாவிய சிறிலங்கா மன்றத்தின் பேச்சாளர் யாசஸ் தர்மதாச தெரிவித்துள்ளார்.
அட்மிரல் ஒப் த பிளீட் வசந்த கரன்னகொட மற்றும் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட முன்னாள் இராணுவத் தலைவர்கள் மீது, தடைகளை விதிப்பதில் டேவிட் லாமி குறிப்பிடத்தக்க பங்கை வகித்தார்.
ஆதாரமற்ற போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தண்டனை நடவடிக்கைகளுக்கு லாமி அழுத்தம் கொடுத்தார்.
புதிய அரசாங்கம் பிரித்தானிய நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளித்தது என்பது குறித்து தேசிய மக்கள் சக்தி விளக்கம் அளிக்க வேண்டும்.
பிரித்தானியாவின் வெளியுறவு, கொமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளராக ஏழு மாதங்களுக்குப் பின்னர், கரன்னகொட, சவேந்திர சில்வா, ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் ஆகியோர் மீது, தடைகள் அறிவிக்கப்பட்டது.
ஏழு மாதங்களுக்குப் பின்னர், வெளியுறவு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் லாமி நியமிக்கப்பட்டார்.
கடந்த தேர்தல் பரப்புரையின் போது, பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக, 2025 மார்ச் 25 ஆம் நாள் லாமி உறுதியளித்தார்.
தடைகளை விதிக்கும் முடிவு, கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்வதாகவும், அவர் அறிவித்தார்.
பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், சிறிலங்காவில் நடந்த போரின் போது, விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் அளித்தது.
விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல், பிரித்தானியாவில் வசிக்கிறார் என்பதை நாம் எப்படி மறக்க முடியும்?
பிரித்தானியாவின் தடைகள் குறித்து விசாரித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு அமைச்சர்கள் மட்டக் குழுவை நியமிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்த போதிலும், அது என்ன செய்கிறது என்று அறியவில்லை.
பிரித்தானியா,கனடா உள்ளிட்ட பிற ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள் போரில் வெற்றி பெற்ற சிறிலங்காவுக்கு எதிராக பரப்புரை செய்து வருகின்றன.
சிறிலங்கா இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்த லாமியின் வருகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, உண்மையான எதிர்க்கட்சியை வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
