மேலும்

சிறிலங்கா- சவுதி அரேபியா இடையே வான்பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இணக்கம்

வான் பாதுகாப்பு மற்றும் இராணுவ திறனை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, சிறிலங்கா மற்றும் சவுதி அரேபியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ரியாத்திற்கு மேற்கொண்ட  அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, ​​சவுதி வான் பாதுகாப்புப் படைகளின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஸ்யாத் பின் சுலைமான் அல்-அம்ரோவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

2026 உலக பாதுகாப்பு கண்காட்சியின் ஒரு பகுதியாக சவுதி பாதுகாப்பு அமைச்சில் இந்த உயர்மட்ட சந்திப்பு நடந்ததாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் மட்ட பேச்சுக்கள் மூலம் அனுபவங்களைப் பகிர்வதை இலகுபடுத்தல்  மற்றும் பாதுகாப்பு துறைகளில் பரஸ்பர பங்கேற்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட தொழில்முறை இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, சிறிலங்காவின் வான் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்துவதற்கு, சவுதி அரேபியாவில்  சிறப்பு பயிற்சி வாய்ப்புகளை வழங்குமாறு சிறிலங்கா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வான் பாதுகாப்பு மற்றும் பரந்த இராணுவ ஈடுபாட்டின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை, இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியதன் மூலம், சந்திப்பு நேர்மறையாக இருந்தது என்றும் சிறிலங்கா  பாதுகாப்பு அமைச்சு  அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *