மேலும்

ரில்வின் சில்வா குழு இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியது

ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் சிறப்பு பார்வையாளர்கள் திட்டத்தின் கீழ், ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் பெப்ரவரி 5 ஆம் நாள் தொடக்கம், 12,ஆம் நாள் வரை இந்தியாவுக்கான  அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இது ரில்வின் சில்வாவின் முதலாவது இந்திய பயணமாகும்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜ் மற்றும்  இளங்குமரன் ஆகியோரும், ஜனக அதிகாரி, ஹேமதிலக கமகே மற்றும் கல்பனா மதுபாஷினி உள்ளிட்ட  கட்சி பிரதிநிதிகளும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.

ஜேவிபி குழுவினர், புதுடெல்லி, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று, உயர் மட்டக் கூட்டங்கள் மற்றும் நிறுவன பார்வையிடல்களில் பங்கேற்றது.

புதுடெல்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும்  இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரைச் சந்தித்தனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வை மகாசாகர் திட்டத்தின் கீழ் நம்பகமான பங்காளியாக சிறிலங்காவுக்கு  இந்தியா அளித்த உறுதிப்பாட்டை இந்தியத் தரப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.

பகிரப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகள், சமூக நல முயற்சிகள் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட மேம்பாடு குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

புதுடெல்லியில் இந்தியாவின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், கதி சக்தி முயற்சி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்குச் சென்ற ரில்வின் சில்வா குழுவினருக்கு,  டிஜிட்டல் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிலையான விவசாயம் ஆகியவற்றில் இந்தியாவின் திறன்கள் பற்றி விளக்கப்பட்டது.

அகமதாபாத்தில், ஜேவிபி குழுவினர்,  குஜராத் முதல்வர் பூபேந்திர படேலையும், துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவியையும் சந்தித்தனர்.

பால் பண்ணை, உள்கட்டமைப்பு, கூட்டுறவு, நிதி தொழில்நுட்பம், சுற்றுலா, புதுமை மற்றும் தொழில்முனைவோர் போன்ற துறைகளில் குஜராத்தின் உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில், ரில்வின் சில்வா குழுவினர் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனைச் சந்தித்ததுடன்,  விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கும், பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் வசதியான விழிஞ்சம் ஆழ்கடல் கொள்கலன்  துறைமுகத்திற்கும் சென்று பார்வையிட்டனர்.

ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவின் பயணம் இருதரப்பு புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்காவில் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் தலைமையுடன் இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *