100 மில்லியன் ரூபா செலவில் சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள்
சிறிலங்காவின் 78வது சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்காக 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் 100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக மாகாண சபைகள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுதந்திர நாள் நிகழ்வுக்கு சுமார் 69 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர நாள் ஒரு முக்கிய தேசிய நிகழ்வாக இருப்பதால், அதற்கு நிதி ஒதுக்குவது ஒரு நிலையான நடைமுறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சுமார் 2,000 அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், ஆனால் நாட்டில் பணியாற்றும் அனைத்து இராஜதந்திரிகளும் பங்கேற்க அழைக்கப்படுவார்கள் என்றும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்கு 107 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்த நிலையில், குறைந்த செலவுடன் 2025 சுதந்திர நாள் கொண்டாட்டங்களை நடத்தியதாக பரப்புரை செய்த சிறிலங்கா அரசாங்கம் இந்த ஆண்டு 100 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளது.
அதேவேளை சிறிலங்காவின் சுதந்திர நாளான பெப்ரவரி 4ஆம் நாளை தமிழர் தாயகத்தில் கரிநாளாக கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
