மேலும்

மாவிலாறு போல மாறிய தையிட்டி விவகாரம்

தைப்பொங்கல் விழா மற்றும் அரச நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அங்கு வெளிப்படுத்திய சில கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

அவர் தனது ஆட்சியை, வடக்கில் உள்ள தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நிறுவுவதற்கு முயன்றிருந்தார்.

அதனால் தான், முன்னர் வடக்கில் தனியாட்சி கேட்டுப் போராடிய தமிழ் மக்கள், இப்பொழுது தங்களின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருப்பதாக, குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவர், வடக்கில் உள்ள எந்த பிரச்சினைகளையும் கண்டு கொள்ளவில்லை, எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வை முன் வைக்கவில்லை.

அவர் தனியே அரசாங்கத்தினது கொள்கை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதிலும், அரசாங்கத்தின் செல்வாக்கை உறுதிப்படுத்துவதிலும், மாத்திரம் கவனம் செலுத்தியிருந்தார்.

காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, போர்க்கால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சினை என நீண்டு செல்லும் பிரச்சினைகளுக்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பதில் எதையும் கொடுக்கவில்லை.

அதுபற்றி அவரிடம் யாரும் கேள்வி எழுப்பவும் இல்லை, கேள்வி எழுப்பப்பட்டிருந்தால் கூட அதற்கான பதில் கிடைத்திருக்குமா என்றும் தெரியவில்லை.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் கடந்த 2026 ஜனவரி 7ஆம் நாள்,  கொழும்பில் நடந்த போது,  வடக்கு மற்றும் கிழக்கில் காணிகள் விடுவிப்பு, வீதிகள் திறப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.

யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது குறித்த முன்னேற்றங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்ட அந்த கூட்டத்தில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிறிலங்கா அதிபர், நான் வடக்கிற்கு வரும்போது இந்த விடயம் குறித்து விரிவாகப் பேசலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால் வடக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது அப்படி எந்த பேச்சுக்களும் நடக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படவும் இல்லை.

அண்மைக்காலத்தில், அரசாங்கத்திற்கு சவாலான ஒரு விடயமாக இருந்து வருவது,  தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டடமாகும்.

இது தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ள ஒரு விகாரை.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த விகாரையை அகற்றி, காணி உரிமையாளர்களிடம் காணிகளை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில்  இரட்டை வேடம் போடுகிறது.

சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க, நயினாதீவு நாகதீப விகாரைக்குச் சென்றிருந்த போதும்-  யாழ்ப்பாணம் நாகவிகாரைக்குச் சென்றிருந்த போதும், இரண்டு விகாராதிபதிகளும் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்குமாறு கூறியிருந்தனர்.

சிறிலங்கா அதிபர் அதனை ஏற்றுக் கொண்டாலும், அதனை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் செயற்படத் தயாராக இல்லை.

இந்த பிரச்சினைக்கான தீர்வு குறித்து  அரசாங்கம் தெளிவான திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை. அதனிடம் இருப்பது மாற்றுக்காணி அல்லது இழப்பீடு என்ற ஒரே யோசனை தான்.

இந்த விடயத்தில் தீர்க்கமான நிலைப்பாடு ஒன்றை அரசாங்கத்தினால் எடுக்க முடிந்திருக்கும். அதனை செய்யக் கூடிய காலம் கிட்டத்தட்ட கடந்து சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

ஏனென்றால், இந்த விவகாரத்தை இப்போது  தீவிர அரசியல் மயப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு விட்டன. கிட்டத்தட்ட மாவிலாறு விவகாரம் போல.

மாவிலாறு மூடப்பட்ட போது, சிங்களவர்கள் நீரின்றி- பசியில் சாகப் போகிறார்கள் என்றளவுக்கு, அந்த விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டது.

சிங்கள பௌத்த பேரினவாதிகள் போர் என்ற ஒரே இலக்கிற்குள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைக் கொண்டு சென்றனர். அதில் ஜேவிபிக்கு அதிக பங்கு இருந்தது. தையிட்டி விவகாரமும் அப்படித் தான் மாற்றப்படுகிறது.

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்த விவகாரத்தை வைத்து அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள் நடப்பதாக – இனவாதத்தை தூண்டுகின்ற முயற்சிகள் நடப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

தொல்பொருள் சின்னங்களை வைத்தும், ஆலயங்களை வைத்தும் இனவாதத்தை கிளப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார்.

இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இந்த விடயத்தில் மறைமுகமாக தானே இனவாதத்தை தூண்டியிருப்பது அவருக்குத் தெரியாமல் போனது ஆச்சரியம்.

போயா தினங்களில் சிலர் சில் எடுப்பதற்காக சிறிமாபோதியை – ருவான்வெலிசாயவை கடந்து யாழ்ப்பாணம் செல்கிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.

மற்றொரு பக்கம் போயா தினங்களில் காணி உரிமைக்காக விகாரைக்கு முன்பாக  போராட்டம் நடத்துகின்றவர்களுக்கு அங்கு காணி இருக்கிறதா என்று விசாரணை நடத்துமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

சிறிலங்கா அதிபர் நடுநிலையாக பேசுகிறார் என்றே கருத தோன்றும்,  ஆனால் இதற்குப் பின்னால் ஒரு ஆழமான விடயம் இருக்கிறது.

காணி உரிமையாளர்கள் மட்டும்தான் போராட்டம் நடத்த வேண்டும் என, சிறிலங்கா அதிபர் எதிர்பார்க்கிறார். அது தவறு.

காணி உரிமை இல்லாதவர்கள் அங்கு போராட்டம் நடத்தக் கூடாது என்ற தொனியில் அவர் கருத்து வெளியிட்டிருப்பது அபத்தமானது.

அப்படி பார்த்தால் ஜேவிபியுடன் தொடர்பில்லாத ஏராளமான விடயங்களுக்காக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஏன் கொழும்பின் வீதிகளில் போராட்டம் நடத்தினார்? என்று தாராளமாக கேள்வி எழுப்ப முடியும்.

தையிட்டியில் போராட்டம் நடத்துபவர்கள் யார் என்று விசாரிக்குமாறு, குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு  உத்தரவிட்டிருப்பதாக, அவர் கூறியிருப்பது தமிழர்களை அச்சுறுத்துகின்ற செயற்பாடு.

போராட்டம் நடத்துபவர்களின் பின்னணியை ஆராயுமான கூறுவது ஒரு மோசமான உரிமை மீறல்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் காலம் காலமாக இவ்வாறான அடக்குமுறையைத்தான் தமிழர்கள் மீது பிரயோகித்து வந்திருக்கிறார்கள்.

அவர்கள் தமிழர்கள் தமது உரிமைக்காக வீதியில் இறங்குகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும், அரசபடைகளை வைத்தோ புலனாய்வு பிரிவுகளை வைத்தோ, காவல்துறையினரை வைத்தோ அடக்குகின்ற முயற்சிகளே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் தான், தமிழர்கள் ஆயுதம் ஏந்துகின்ற நிலையை முன்னர் ஏற்படுத்தியது என்ற வரலாற்றைக் கூட, சிறிலங்கா அதிபர் மறந்து விட்டார்.

ஒரு விடயத்துக்காக போராட்டம் நடத்துவது, தனிமனித உரிமை. அந்த அடிப்படை உரிமையைக் கூட, சிறிலங்கா அதிபர் யாழ்ப்பாணத்தில் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்.

அவ்வாறான உரிமையை பிரயோகிக்க முற்படுகின்றவர்கள் தமிழர்களாக இருப்பதால் தான், அவர்கள் மீது இனவாத முத்திரை குத்த முனைந்திருக்கிறார்.

அவர்களை தனது புலனாய்வு பிரிவுகளின் ஊடாக அச்சுறுத்த முற்பட்டிருக்கிறார். இன்னொரு பக்கம், அவர் சிங்கள இனவாதத்தை தான் கண்டிப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறார்.

அதனால் தான், பௌர்ணமி தோறும் சில் எடுப்பதற்கு அனுராதபுரத்தை கடந்து யாழ்ப்பாணம் செல்கிறார்கள், அது பக்தியால் அல்ல இன வெறுப்பால் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இது சிங்கள பௌத்தர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது.

அவர் ஒரு பக்கம் தமிழர்களை அச்சுறுத்திக் கொண்டு இன்னொரு பக்கம் தானும் சிங்கள பௌத்தர்களை எச்சரிக்கிறேன் என்று காட்டிக் கொள்ள முயன்றார்.

சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு இது கடும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும்,  இந்த கருத்துக்கு எதிரான கருத்துக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

சிறிலங்கா அதிபரைப் பொறுத்தவரையில், தனது நடுநிலையை வெளிப்படுத்துவதற்காக-  தான் இனவாதமற்ற ஆட்சியை நடத்துவதாக கூறுவதற்காக -தெற்கிலிருந்து வடக்கிற்கு யாத்திரை வரும் சிங்கள பௌத்தர்களை இனவாதிகளாக அடையாளப்படுத்த முனைந்திருக்கிறார். இது தவறான விடயம்.

வடக்கில் உள்ள பௌத்த ஆலயங்களில் வழிபாடு செய்வதற்கு யாரும் தடை விதிக்கவில்லை. அதனை தமிழர்கள் எதிர்க்கவும் இல்லை

யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு செல்பவர்களுக்கு யாரும் பாதுகாப்பு வழங்குவதும் இல்லை. அங்கு வழிபடச் செல்பவர்களை யாரும் அச்சுறுத்துவதும் இல்லை.

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அவர்களை நடுவீதியில் நிறுத்தி விட்டு, அமைக்கப்பட்டுள்ள விகாரையில் நடத்தப்படுகின்ற பேரினவாத நிகழ்வுகளை தான் தமிழர்கள் எதிர்க்கிறார்கள்.

சிறிலங்கா அதிபரின் இந்த கருத்தினால், சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் தூண்டி விடப்பட்டிருக்கிறது.

எந்த பேரினவாதத்திற்கு எதிராக, தான் செயல்படுவதாக கூறிக் கொண்டாரோ, அதே பேரினவாதத்தை அவர் தட்டி எழுப்புகின்ற வேலையைத் தான் செய்திருக்கிறார். இது அரசாங்கத்திற்கு நிச்சயம் சாதகமானது.

இந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு அரசாங்கம் தையிட்டி விகாரை பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதை தாமதிக்கலாம்.

காலத்தை இழுத்தடிப்பது அரசாங்கத்துக்கு சாதகமானது. அதனால் தான், தையிட்டி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான காலம் கடந்து செல்வதாக இந்தப் பத்தியின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டது.

இவ்வளவு காலத்திற்குள் அரசாங்கம் ஒரு தீர்வை எட்டி இருக்க முடியும், அதனை அரசாங்கம் தவற விட்டு விட்டது.

இப்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் இனவாத தீ மூட்டப்பட்டுள்ள சூழலில், அரசாங்கம் எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையும், தீவிரமானதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

தமிழர்கள் மத்தியிலும் அதே நிலை தான் ஏற்படும்.

ஆக தையிட்டி விகாரையை அகற்றாமல் – இந்த பிரச்சினைக்கு  ஒரு தீர்வு காணாமல் – காலத்தை இழுத்தடிப்பதற்கு ஏற்ற சூழலை, உருவாக்கிக் கொடுத்திருக்கிறது சிறிலங்கா அதிபரின் கருத்து.

அப்படியானால், சிறிலங்கா அதிபர் இனவாதமற்ற ஆட்சியை நடத்துவதாக கூறிக் கொண்டது எப்படி உண்மையாகும்?

அதைவிட இத்தகையதொரு சூழலை எதிர்பார்த்தே அவர் இப்படிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தினாரா என்று சந்தேகிக்கும் நிலையும் தோன்றியுள்ளது.

-என்.கண்ணன்.
வழிமூலம்- வீரகேசரி வாரவெளியீடு (25.01.2026)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *