சிவில் சமூக உறுப்பினர்கள் நியமனம் – நாடாளுமன்ற மரபை மீறிவிட்டது அரசாங்கம்
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை பெயரிடுவதற்கு முன்னர், நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தியதன் மூலம், நாடாளுமன்ற மரபு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல், நிலையியற் கட்டளைகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர், பிரதமர் ஹரிணி அமரசூரிய மூன்று பெயர்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
நாடாளுமன்றத்தில் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அவை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், மூன்று புதிய சிவில் சமூக உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்பட்ட விதம் நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற மரபுக்கு முரணானது என்று எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம், தெரிவித்துள்ளார்.
பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒப்புக்கொண்ட மூன்று வேட்பாளர்களுக்கு எதிர்க்கட்சி தரப்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை
என்றாலும், புதிய நியமனதாரர்களுக்கு உரிய மரியாதை அளிக்க அரசாங்கம் நிலையியற் கட்டளைகளையும் நாடாளுமன்ற மரபுகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பெயர்களை அங்கீகரிப்பதற்கு முன்னர் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தியது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் ஒரு பிரேரணையாக முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும், அதன் பின்னர் அந்த பிரேரணை ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படும்.
பின்னர் இந்த பிரேரணை, நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, முன்னாள் அதிபரின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, முன்னாள் அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் வசந்த செனவிரத்ன ஆகியோரை அரசியலமைப்பு பேரவையின் புதிய சிவில் சமூக உறுப்பினர்களாக நியமிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
