நந்தன குணதிலக மரணம் – அவர் வெறும் பூச்சியம் என்கிறார் அமைச்சர் லால்காந்த
ஜேவிபியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக மரணமாகியுள்ள நிலையில், அவர் வெறும் பூச்சியம் தான் என்று ஜேவிபியின் முக்கிய உறுப்பினரும் அமைச்சருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஜேவிபியின் நிர்வாகச் செயலாளராக இருந்த மூத்த உறுப்பினரான நந்தன குணதிலக இன்று தனது 64 ஆவது வயதில் காலமானார்.
நீண்டநாட்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த அவர், ராகம மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
1999ஆம் ஆண்டு ஜேவிபியின் சார்பில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நந்தன குணதிலக, பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகி ஐதேகவில் இணைந்து கொண்டார்.
சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அவர் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் உரித்துகளை நீக்கும் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்ட போது நந்தன குணதிலக அதனை தீவிரமாக எதிர்த்திருந்தார்.
அதற்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்லப் போவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவரது மரணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கே.டி. லால் காந்தா ” நந்தன குணதிலக எனக்கு பூச்சியம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஜே.பி.யைக் கட்டியெழுப்ப அவர் தியாகங்களைச் செய்தார், அதற்காக நான் அவருக்கு பத்து மதிப்பெண்கள் தருவேன்.
அதே நேரத்தில், எங்கள் கட்சியை அழிக்க அவர் தியாகங்களைச் செய்தார். அதற்காக, நான் பத்து மதிப்பெண்களைக் கழிப்பேன்.
எனவே, நந்தன குணதிலக பூஜ்ஜியத்தைக் கொண்ட ஒரு மனிதர்,” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
