மேலும்

அரசியலமைப்பு பேரவைக்கு 3 உறுப்பினர்களை நியமிப்பதில் இழுபறி

அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களின் பெயர்களை தெரிவு செய்வதில், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் உடன்பாடு ஏற்படவில்லை.

சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  அரசியலமைப்பு பேரவை  உறுப்பினர்களான அனுலா விஜேசுந்தர,  பிரதாப் ராமானுஜன் மற்றும்  தினேஷா சமரட்ன ஆகியோரின் பதவிக்காலம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், புதிய நியமனங்கள் குறித்து பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடந்து வந்தன.

அரசியலமைப்பின்படி, சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களையும் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் உடன்பாட்டின் மூலம் மட்டுமே நியமிக்க முடியும்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அண்மைய சந்திப்பின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரியவும்,  சஜித் பிரேமதாசவும்,  தலா ஒவ்வொரு  பட்டியலை சமர்ப்பித்தனர்.

பிரதமர்  ஹரிணி அமரசூரிய ஏழு பெயர்களை சமர்ப்பித்ததாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  10 பெயர்களை சமர்ப்பித்ததாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் துணைவேந்தர், முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் பல நிபுணர்கள்  சஜித் பிரேமதாச முன்வைத்த பட்டியலில் அடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச தரப்பு  பரிந்துரைத்த  ஒருவரை ஏற்றுக் கொள்ள சஜித் பிரேமதாச சம்மதித்தால், அவரால் பரிந்துரைக்கப்படும் இரண்டு  வேட்பாளர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்திருந்தது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் மாவட்டச் செயலாளரின் பெயரை பரிந்துரைத்தார் என்றும்,  அவரை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் உடன்படவில்லை என்றும்,  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சமீபத்திய நடத்தையைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு பேரவையின்  உறுப்பினராக பாரபட்சமின்றி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அரசியலமைப்பு பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அரசியலமைப்பின் பிரிவு 41F இன் படி, அரசியலமைப்பு பேரைவைக்கு  சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டால்,  புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் வரை தற்போதைய சிவில் சமூக உறுப்பினர்கள், தங்கள் பதவிகளில் தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *