விரைவில் சீனா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் குறுகிய நேர சிறிலங்கா பயணத்தை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பீஜிங்கிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்காவில் தரித்துச் சென்றிருந்தார்.
இதன்போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை, அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று பேச்சு நடத்தினார்.
இதன்போது, சீன-சிறிலங்கா ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் கடிதம் ஒன்றை, சீன வெளியுறவு அமைச்சரிடம் விஜித ஹேரத் வழங்கினார்.
அந்தக் கடிதத்தில், டிட்வா சூறாவளியின் போது சீனா வழங்கிய உதவிக்கு சிறிலங்கா அதிபர் நன்றி தெரிவித்திருந்ததுடன், சிறிலங்காவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதிக்கு மேலும் சீனாவிடம் இருந்து நிதி உதவியைக் கோரியிருந்தார்.
உலகளாவிய நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், உலகம் நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும் நேரத்தில், தெற்கில் உள்ள நாடுகள் ஒன்றாக நிற்க வேண்டியதன் அவசியத்தை சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் போன்ற குழுக்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுளளார்.
பிரிக்ஸ் அமைப்பில் சேர சிறிலங்கா கடந்த காலங்களில் விருப்பம் தெரிவித்திருந்த போதும், பிரிக்ஸ் கூட்டணியில் சேரும் நாடுகளுக்கு கூடுதலாக 10வீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்கள், அதில் இணைவதற்கான சிறிலங்காவின் ஆரம்ப உற்சாகத்தை குறைத்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் குறுகிய காலப் பயணத்தை மேற்கொண்டதால், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மேலும் விரிவான பேச்சுக்களை நடத்துவதற்கு, விரைவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பீஜிங் செல்வதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
