மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அனுர
மன்னாரில் 50 மெகாவாட் திறன்கொண்ட, காற்றாலை மின் திட்டம், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்றுக்காலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
ஹேலிஸ் பென்டன்ஸ் (Hayleys Fentons) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் இந்த திட்டம், மன்னார் பகுதியில் கிடைக்கும் வலுவான இயற்கை காற்றாலை வளங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அதிநவீன காற்றாலை மின் நிலையம் 10 நவீன காற்றாலை விசையாழிகளைக் கொண்டிருக்கும், மேலும் ஆண்டுதோறும் 207 மில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒரு அலகு 0.0465 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்படும். இது ஒரு அலகிற்கு சுமார் 14.37 சிறிலங்கா ரூபாவுக்கு சமமாகும்.
இது சிறிலங்காவில் காற்றாலை மின் உற்பத்திக்காக இதுவரை செலவிடப்பட்ட மிகக் குறைந்த கட்டணங்களில் ஒன்றாகும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2027 மார்ச் இல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிராக மன்னார் மக்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தனர்.

