இந்திய இராணுவத் தளபதியை சந்திக்காத சிறிலங்கா அதிபர், பிரதமர்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பியுள்ளார்.
ஜனவரி 06 ஆம் நாள் கொழும்பிற்குப் பயணம் மேற்கொண்ட அவர், இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருந்தார்.
இதன்போது, சிறிலங்காவின் மூத்த இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் ஜெனரல் திவேதி உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தினார்.
பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்துதல், தொழில்முறை இராணுவக் கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்தல் ஆகிய விடயங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்திய இராணுவத் தளபதி சிறிலங்கா இராணுவ அமைப்புகள் மற்றும் இராணுவ நிலைகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையேயான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை பிரதிபலிக்கும் வகையில், சிறிலங்கா இராணுவத்தின் நலனுக்காக அவர் கொடைகளையும் வழங்கினார்.
நேற்று அவர் நாடு திரும்புவதற்கு முன்னர், சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி, மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. டோலகே, ஜெனரல் திவேதி மற்றும் சுனிதா திவேதி ஆகியோருக்கு சிறப்பு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இந்தப் பயணத்தின் போது இந்திய இராணுவத் தளபதி சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்ததாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

