மேலும்

பாடத்திட்டத்தில் முறையற்ற குறிப்பு -பிரதமர் ஹரிணி பதவி விலக கோரிக்கை

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாகவே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற குறிப்புகள் பள்ளி மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும். பொருத்தமற்ற விடயங்களைப் பரிசோதிக்க வழிவகுக்கும் .  இது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இந்த நடவடிக்கை நாட்டின் மனித மூலதனத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியாகும்.

உயர் மட்டங்களில் விழிப்புணர்வு இல்லாமல் இது நடந்திருக்க முடியாது.

பிரதமர் உடனடியாக கல்வி அமைச்சர்  பதவியில் இருந்து விலக வேண்டும் .  அவ்வாறு செய்யத் தவறினால், அதிபர் அனுரகுமார திசாநாயக்க அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், கல்வி அமைச்சை குறிவைத்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தில் அச்சிடப்பட்டிருந்த வயது வந்தோருக்கான இணையத்தள முகவரியை சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தடை செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *