மன்னாரில் திட்டமிட்டபடி காற்றாலைகளை அமைப்பதில் அனுர அரசு விடாப்பிடி
மன்னாரில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 14 காற்றாலைகளையும் அமைப்பதில், சிறிலங்கா அரசாங்கம் விடாப்பிடியாக இருப்பதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழுவில் நேற்று மாலை சர்வமதக் குழு, பொது அமைப்புக்கள், போராட்டக் குழு ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்த போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபருடன் எந்தவித ஒப்பந்தங்களையும் தான் செய்து கொள்ளவில்லை என்றும் மன்னார் ஆயர் கூறினார்.
“சிறிலங்கா அதிபரை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலைகள் வேண்டாம் என்று கூறுகின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினேன்.
எனினும், அந்த 14 காற்றாலைகளையும் மன்னார் தீவில் திட்டமிட்டபடி அமைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இறுதியான தீர்மானமாக உள்ளது. அதில் அவர்கள் மிகவும் திடமாக இருக்கின்றார்கள்”என்றும், ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் மேலும் தெரிவித்துள்ளார்.
