மேலும்

பின்னணியில் இந்தியா இருந்ததாக கூறவேயில்லை- ரவி செனவிரத்ன மறுப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருந்தது என தாம் கூறியதாக வெளியான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன  மறுத்துள்ளார்.

இதுதொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சின் சார்பில் சிறிலங்கா காவல்துறையினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில்  முக்கிய மூளையாக செயற்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்திற்குப் பின்னால் இந்தியா இருப்பதாகக் கூறப்படுவதாகவும்  ஒரு திரிபுபடுத்தப்பட்ட செய்தியுடன் தொடர்புடைய தவறான தகவல்களைப் பரப்பிய நபர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

தற்போது  பொது பாதுகாப்பு அமைச்சின்  செயலாளராகப் பணியாற்றும், ஓய்வுபெற்ற மூத்த பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்ன கூறியதாக சமூக ஊடகங்களில் இந்த  தவறான அறிக்கை, பரவி வருகிறது.

அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, ஒக்டோபர் 8ஆம் திகதி  நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவில் முன்னிலையாகியபோது, ​​குழு எழுப்பிய கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்ததாகவும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாகக் கூறும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

“அவர் பரப்பப்படும் கூற்றுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்துகிறது என்பதை வலியுறுத்தினார்.

கூடுதலாக, இந்த தவறான தகவலைப் பரப்புவதற்குப் பொறுப்பானவர்கள் மீது பொருத்தமான சட்ட நடவடிக்கைகளைத் தொடருமாறு தனது சட்டப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக தளங்களில், திரிபுபடுத்தப்பட்ட  அறிக்கையைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் குழுக்கள் மீது முறையான விசாரணையைத் தொடங்கவும் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *