சிறிலங்காவுக்கு 10 ட்ரோன்களை வழங்குகிறது ஜப்பான்
சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள சுமார் 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான ஜிஜி பிரஸ் ( Jiji Press) செய்தி வெளியிட்டுள்ளது.
டோக்கியோவில் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நேற்று நடத்திய சந்திப்பின் போது, இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பானின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் கீழ் சிறிலங்காவிற்கு பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
“இந்தியப் பெருங்கடலில் ஒரு மூலோபாய புள்ளியில் அமைந்துள்ள சிறிலங்காவின் உறுதித்தன்மை மற்றும் அபிவிருத்தி மிகவும் முக்கியமானது” என்று இருதரப்பு பேச்சுக்களுக்குப் பின்னர், நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஜப்பானிய பிரதமர் இஷிபா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அமைதியான மற்றும் நிலையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்காவின் அரசியல் நிலைமையை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறு பால் பண்ணை விவசாயிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்திலும் இரு அரசாங்கங்களும் கையெழுத்திட்டுள்ளன.
புளிக்கவைத்தல் மற்றும் உலர்த்துதல் கருவிகளுக்கு ஜப்பான் 463 மில்லியன் யென் கொடையை வழங்கவுள்ளது.