மேலும்

மன்னாரை அதிர வைத்த கண்டனப் போராட்டம்- ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்

மன்னாரில் காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், பொதுமக்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் மன்னாரில் நேற்று பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் நேற்று, மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேற்றுக் காலை முதல் மன்னார் நகரப் பகுதி உள்ளடங்களாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்றுக் காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி, கண்டன பேரணியாக சென்றனர்.

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிறிலங்கா காவல்துதறையினரால் பொதுமக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக்குழு ஒன்று வருகை தந்தது.

மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான பேரணி மருத்துவமனை வீதியூடாக சென்று மன்னார் காவல் நிலைய வீதியூடாக மன்னார் நகரப் பகுதியை சென்றடைந்தது.

பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது.

பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்று கூடி இடத்திற்கு வருகை தந்த  போது போராட்டக்குழு சார்பாக, சிறிலங்கா அதிபருக்கு அனுப்ப வேண்டிய கடிதம் அவரிடம் கையளிக்கப்பட்டது.

கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம் பெறும் பகுதிக்குச் சென்றனர்.

பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பினர்.

இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கலகம் அடக்கும் காவல்துறையினர் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இந்தப்  போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *