ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்காவின் இரட்டை வேடம் அம்பலம்
ஐ.நா. பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக நடந்து கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பலஸ்தீன அரசுக்கான சிறிலங்காவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், அவர் காசாவில் இஸ்ரேலால் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து, இஸ்ரேலைப் பெயரிட்டு விமர்சிக்காமல் நழுவியிருந்தார்.
ஐ.நா பொதுச்சபையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்ற மேடைக்கு வந்த போது, ஐ.நா உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பெரும்பான்மையான பிரதிநிதிகள், அதனை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
சிறிலங்கா குழு வெளிநடப்பு செய்வதில் இணைந்திருந்ததா என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.
சிறிலங்கா குழு எவ்வாறு செயற்பட்டது என்பதை ஐ.நா. தொலைக்காட்சிகள் தெளிவாகக் காட்டவில்லை.
இருப்பினும், பின்னர் வந்த காட்சிகளில், இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு பெரும்பாலும் வெறுமையாக இருந்த அரங்கில் உரையாற்றும்போது, சிறிலங்கா குழுவின் இடத்தில், ஐ.நா.வுக்கான சிறிலங்கா தூதரகத்தைச் சேர்ந்த ஒருவர் அமர்ந்திருப்பதைக் காண முடிந்துள்ளது.