ஜெனிவாவில் மீண்டும் நிறைவேறுமா தீர்மானம்?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர், கடந்த 8ஆம் திகதி தொடங்கிய போது, இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
அந்த விவாதத்தில் 43 நாடுகள் இலங்கைக்கு சாதகமாக கருத்துக்களை வெளியிட்டதாக, வெளிவிவகார அமைச்சு, அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது.
எனினும், பஹ்ரைன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எதியோப்பியா, ஐவரிகோஸ்ட், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ், தாய்லாந்து, வனூட்டு, தென்கொரியா, எரித்ரியா, ஈரான், நேபாளம், இந்தியா, சிம்பாப்வே, வியட்நாம், சீனா, அஜர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுவேலா, மாலைதீவுகள், கியூபா, தென்சூடான், சூடான், ரஷ்யா மற்றும் புரூண்டி என, இலங்கைக்கு ஆதரவாக பேசிய நாடுகளைப் பட்டியலிட்டிருந்தது வெளிவிவகார அமைச்சு.
ஆனால், இதில், 33 நாடுகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 123நாடுகள் அங்கம் வகித்தாலும், பேரவையில் வாக்களிக்கும் உரிமை பெற்ற நாடுகள் 47 மட்டுமே.
இந்த 47 நாடுகளும் மாத்திரமே எந்த ஒரு தீர்மானத்திற்கும் ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்க முடியும்.
ஏனைய நாடுகள் கண்காணிப்பு நாடுகளாகவே இருக்கும். அவை கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். அதில் ஆதரவையோ எதிர்ப்பையோ வெளியிடலாம்.
ஆனால் தீர்மானம் ஒன்றை தோற்கடிப்பதற்காக அல்லது நிறைவேற்றுவதற்காக அவர்களால் செயற்பட முடியாது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில் இலங்கை தொடர்பான A/HRC/60/L.1 என்ற தீர்மான வரைவு கடந்த 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
அது இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசத்தை அளிக்கும் வகையில், தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பிரித்தானியா, கனடா, வட அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, மலாவி மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அனுசரணை நாடுகளாக இணைந்து இந்த வரைவைத் தயாரித்துள்ளன.
முதல் வரைவு நாடுகளின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான, முதலாவது முறைசாராக் கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் இடம்பெற்றது.
இந்த தீர்மான வரைவு இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசத்தை வழங்குகின்ற வகையில் அமைந்திருப்பது, பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாகும்.
2027 ஆம் ஆண்டு வரை செப்ரெம்பர் மாதம் நடைபெறும் 66ஆவது அமர்விலேயே இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால்- அதுவரை இலங்கைக்கு காலஅவகாசத்தை அளிக்கிறது இந்த வரைவு.
அதற்கிடையில், பேரவையின் 61வது மற்றும் 64வது அமர்வுகளில் வாய்மொழி அறிக்கைகளையும், 63 வது அமர்வில் எழுத்து மூல அறிக்கையும், 66ஆவது அமர்வில் இறுதி அளிக்கையையும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும் என இந்த வரைவு கூறுகிறது.
இந்த தீர்மான வரைவு நிறைவேற்றப்பட்டால், 2027 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடக்கும், பேரவையின் 66வது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை புதிய தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்படும்.
அதற்குள் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடப்பட முடியுமே தவிர, நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து எந்த முயற்சிகளிலும் ஈடுபட முடியாது.
ஆனால் இந்த தீர்மானம் நீர்த்துப்போன ஒன்றாக இருந்தாலும் இது நிறைவேற்றப்படுவது தற்போதைய நிலையில் முக்கியமானது.
ஏனென்றால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனால், ஏற்கனவே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் முன்னெடுக்கின்ற கண்காணிப்பு கைவிடப்படும்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், 2012 ஆம் ஆண்டிலிருந்து, இலங்கை தொடர்பான நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து அறிக்கைகளை சமர்ப்பித்து வந்திருக்கிறது.
அந்தநிலையில் இருந்து முதல் முறையாக இலங்கை விடுபடுகின்ற நிலை உருவாகும்.
அது சர்வதேச அரங்கில், இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக அறிக்கையிடுதல், ஆவணப்படுத்தல் என்பன இல்லாமல் போகின்ற சூழலை ஏற்படுத்தும்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் இவ்வாறான நிலை ஏற்படுவது அதுவே முதல் முறையாகவும் இருக்கும்.
இலங்கையில் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் சரி இப்போது இருப்பவர்களுக்கும் சரி – பிரதான இலக்காக இருப்பது இதுதான்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குப் பதிலளிக்கின்ற நிலைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது.
அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றி விடும் என்பதால், இந்த தீர்மானம் நீர்த்துப் போனதாக இருந்தாலும், நிறைவேற்றப்படுவது முக்கியம்.
அதேபோல, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூலமாக, இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம், கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது போரில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் சான்றுகளை திரட்டுகின்ற பொறிமுறையாகும்.
இதற்கென ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஒரு அலுவலகத்தை அமைத்திருக்கிறது.
இந்த அலுவலகத்தின் ஊடாக, ஆதாரங்களும் சாட்சிகளும் சேகரிக்கப்பட்டு, அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான நிதி ஒதுக்கீடு மிகக் கடினமான சூழ்நிலையிலும், மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த 8ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதத்தில் போது உரையாற்றிய பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள், ஐ.நாவின் இந்த செயற்திட்டத்தை நிறுத்தி, இந்த நிதியை வேறு தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தன.
அதேவேளை, கடந்த புதன்கிழமை நடந்த முறைசாராக் கலந்துரையாடலின் போதும், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள், இந்த செயற்திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு கேட்டிருந்தன.
ஆனால் பிரித்தானியா அதற்கு இணங்கவில்லை.
இந்த செயற்திட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது. இதனை ஏற்க முடியாது என்று தற்போதைய அரசாங்கமும் தெளிவாக கூறிவிட்டது.
இந்த செயற்திட்டம் இடைநிறுத்தப்படுமேயானால் இதுவரை திரட்டப்பட்ட சான்றுகள், சாட்சியங்களின் நிலை கேள்விக்குள்ளாகும்.
அவை அனைத்தும் அழிந்து போகின்ற அல்லது அற்றுப் போகின்ற சூழல் ஏற்படும்.
அத்தகைய ஒரு நிலை ஏற்படுமேயானால், அது இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்கு, நியாயத்தை கோருவதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்குமான வாய்ப்பு முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டு விடும்.
எனவே, ஐ.நாவின் அந்த பொறுப்புக்கூற செயற்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்.
அதனால் காத்திரம் குறைவானதாக இருந்தாலும், முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும்.
ஆனால் இதனை நிறைவேற்றுவதில் கடுமையான சிக்கல்கள் இருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை.
இந்த தீர்மான வரைவு மிகவும் பலவீனமான ஒன்றாக இருப்பதற்கான காரணமே, இதனை நிறைவேற்றுவதில் உள்ள நெருக்கடி தான்.
ஏனென்றால் இலங்கையின் புதிய அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையின் மூலம் பிரச்சனை தீர்த்துக் கொள்வதாக கூறுகின்ற நிலையில் அந்த வாக்குறுதியை நம்ப வேண்டும் என்ற கருத்தை பல நாடுகள் முன்வைத்திருக்கின்றன.
ஆனால் உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது, தீர்க்கப்படமாட்டாது என மனித உரிமை அமைப்புகளும், பாதிக்கப்பட்ட தரப்பினரும் முன்வைக்கும் கருத்துக்களை பல நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பல நாடுகள், இப்பொழுது மனித உரிமைகள் நிலைமையில் பலவீனமான நிலையில் இருக்கின்றன.
இலங்கை போன்ற சூழல் தமக்கு ஏற்பட்டால், சர்வதேச ரீதியான விசாரணைகள் தொடர்பான அழுத்தங்கள் தமக்கும் வரலாம் என அஞ்சுகின்றன. அவை இலங்கைக்கு பின்னால் அணிவகுகின்றன.
ஏற்கனவே குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடுகளும் இவ்வாறான அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காக, இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிடுகின்ற நிலை இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
இவ்வாறான சூழலானது இந்த தீர்மானத்தை முன் வைத்திருக்கின்ற பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளுக்கு தீவிரமான அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அனுசரணை வழங்குகின்ற ஏனைய நான்கு நாடுகளும் ஏனைய நாடுகளை கவரக்கூடிய வலுவானவை அல்ல.
பிரித்தானியாவும் கனடாவுமே நாடுகளின் ஆதரவை பெறக்கூடியவை.
இந்த நாடுகள் அமெரிக்காவின் ஆதரவுடன் இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டால், அது வெற்றி அளிக்க கூடியதாக இருக்கும்.
ஆனால் அமெரிக்கா இப்பொழுது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கவில்லை.
அது இப்பொழுது கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளிடம் இருந்து கூட விலகி நிற்கிறது.
இந்த நிலையினால் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் விடயத்தில் இராஜதந்திர ரீதியான பலவீனங்கள் இருக்கின்றன.
ஆனாலும் இதனை நிறைவேற்றுவதில் அனுசரணை நாடுகள் தீவிரமாக இருக்கின்றன.
இலங்கை அரசாங்கம் கூறுவது போல, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ள 43 நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் நிலையில் இல்லை.
அந்த நாடுகளில் 13 நாடுகள் மாத்திரமே வாக்களிக்கும் தகுதி பெற்றவை.
இந்த 13 நாடுகளின் வாக்குகளையும் இலங்கை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
47 நாடுகள் அங்கம் வகிக்கும் சபையில் பெரும்பாலான நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.
இலங்கை, ஆபிரிக்க நாடுகள் பலவற்றின் ஆதரவை பெற்றிருக்கிறது. ஆசிய- பசுபிக் நாடுகளும் கூட இலங்கைக்கு ஆதரவாகவே இருக்கின்றன.
ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் 13, தீர்மானத்தை ஆதரிக்கின்ற சூழல் காணப்படுகிறது.
கரீபியன் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதும் முக்கியம்.
எவ்வாறாயினும் பிரித்தானியா இந்த தீர்மான வரைவு விடயத்தில் இறுக்கமாக இருப்பதாகவும், அதனை நிறைவேற்றப் போதிய ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும், தெரிகிறது.
ஆனாலும், கடந்த காலங்களைப் போல அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகம்.
-என்.கண்ணன்
வழிமூலம்- வீரகேசரி வாரவெளியீடு (21.09.2025)