புதிய ஜெனிவா தீர்மான வரைவில் பல முக்கிய விடயங்கள் நீக்கம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா தொடர்பான இரண்டாவது தீர்மான வரைவில், சில முக்கிய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்காக, சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பிலான, புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதையடுத்து, அந்த வரைவு தொடர்பான உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல் கடந்த 15ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெற்றிருந்தது.
இந்தநிலையில், முதலாவது வரைவில், திருத்தங்கள் செய்யப்பட்டு, இரண்டாவது வரைவு 23ஆம் திகதி பிற்பகல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாவது வரைவுடன் ஒப்பிடுகையில், இதில் கணிசமானளவு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
“இராணுவமயமாக்கம், ஊழல், மோசடிகள், ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலின்மை மற்றும் கடந்தகால மீறல்கள் விடயத்தில் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு என்பன உள்ளடங்கலாக, பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு வழிகோலிய காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்தித் தீர்வுகாணப்பட வேண்டியது அவசியம்” என முதல் வரைவில் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், புதிய வரைவில், “இராணுவமயமாக்கம்” என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செயற்திறன்மிக்க பொறுப்புக்கூறல் செயன்முறை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என முன்னைய வரைவில், குறிப்பிடப்பட்டிருந்தது.
அது, தற்போது, வெறுமனே பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் திருத்தப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முதல் வரைவில் கூறப்பட்டிருந்தது.
அது தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மற்றும் விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.
“பல தசாப்த காலமாகத் தொடர்ந்த இனவாத மற்றும் பிரிவினைவாத அரசியல் நடவடிக்கைகளினாலும், இனப்பிரச்சினையினாலும் மிகையான பாதிப்புக்களும், துன்பங்களும் ஏற்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்பதாக” முதலாவது வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விடயத்திலும் திருத்தம் செய்யப்பட்டு,“இனப்பிரச்சினை” என்ற சொல் நீக்கப்பட்டு, “மோதல்” என்ற பதம் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, சுயாதீன சிறப்பு சட்டவாளரின் பங்கேற்புடனான தனித்துவமான நீதிப் பொறிமுறை ஒன்றை நிறுவுவது குறித்து கவனம் செலுத்துமாறு, முன்னைய வரைவில் வலியுறுத்தப்பட்டிருந்த போதும், புதிய வரைவில் அது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு அமைய சிறிலங்கா தொடர்பாக, பேரவையின் 61 வது மற்றும் 64வது அமர்வுகளில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்குமாறும், 63 வது மற்றும் 66வது அமர்வுகளில் எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்திடம் கோரப்பட்டிருந்த போதும், புதிய வரைவில், வாய்மொழி அறிக்கை சமர்ப்பிக்கும் விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.