சிறிலங்கா கடற்படையின் 12வது சர்வதேச கடல்சார் மாநாடு ஆரம்பம்
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன், சிறிலங்கா கடற்படை நடத்தும் காலி கலந்துரையாடல் எனப்படும், 12வது சர்வதேச கடல்சார் மாநாடு நேற்று ஆரம்பமாகியுள்ளது.
வெலிசறவில் உள்ள வேவ் அண்ட் லேக் கடற்படை மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.
‘மாறும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் பார்வை’ என்ற கருப்பொருளில் இந்த இரண்டு நாள் மாநாடு இன்று வரை நடைபெறுகிறது.
இதில், 37 நாடுகள் மற்றும் 16 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த முன்னணி கடல்சார் நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாடு நான்கு அமர்வுகளாக இடம்பெறுவதுடன், கடல்சார் சூழல், கடல்சார் நிர்வாகம், கடல்சார் பொருளாதாரம், கடல்சார் நிலைத்தன்மை மற்றும் சுத்தமான இந்தியப் பெருங்கடல் ஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள்களில் கவனம் செலுத்துகிறது.
இந்த மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்திய சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறிலங்கா கடற்படையின் முக்கிய பங்கு குறித்து விபரித்தார்.
இங்கு உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, உலகளாவிய கடல்சார் பங்காளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சிறிலங்கா கடற்படையின் அர்ப்பணிப்புக்காக பாராட்டுத் தெரிவித்ததுடன், இந்தியப் பெருங்கடலின் எதிர்காலம் குறித்த முன்னணி மன்றமாக காலி கலந்துரையாடல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
புவிசார் அரசியல் போட்டி, சுற்றுச்சூழல் கவலைகள், சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் பிராந்தியத்தில் பிற பாரம்பரியமற்ற கடல்சார் சவால்களை நிவர்த்தி செய்ய கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பனாகொட, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் தாய்லாந்து, நெதர்லாந்து, ரஷ்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கனடா, அவுஸ்ரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படை அதிகாரிகள், ஆசிய-பசிபிக் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் மூத்த கடற்படை அதிகாரிகள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் கடல்சார் நிபுணர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வில் சிறிலங்காவுக்கான தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள், அமைச்சர்கள், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர , முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட , பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.