மேலும்

ட்ரம்பின் சிறப்புத் தூதுவருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவரும், வெள்ளை மாளிகையின் அதிபர் பணியாளர் பணியகத்தின் பணிப்பாளருமான செர்ஜியோ கோரை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் நியூயோர்க்கில் உள்ள, ஐ.நா சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி பணியகத்தின் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, ​​வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடு உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, வலுவான பொது ஆணையைக் கொண்ட புதிய  சிறிலங்காஅரசாங்கம்,  அமெரிக்காவுடன் நெருக்கமான மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட உறவுகளைத் தொடர உறுதிபூண்டுள்ளது என்றும், நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொண்ட ஒரு வளமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இதன் போது தெரிவித்துள்ளார்.

நீண்ட கால பொருளாதார உறுதித்தன்மையை உறுதி செய்வதற்கும், மக்களின் எதிர்காலத்திற்கான வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உட்பட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வதற்கு பயனுள்ள மற்றும் சமமான தீர்வுகளைக் கண்டறிதல், இருதரப்பு வர்த்தகத்தை பாதிக்கும் தடைகளைக் குறைத்தல் மற்றும் நியாயமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக உறவுகளை உறுதி செய்வதற்கான ஒரு உடன்பாட்டை எட்டுவது குறித்து சிறிலங்கா பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தையும் இரு தரப்பினரும் மீளாய்வு செய்தனர் என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர், வலுவான அமெரிக்க-சிறிலங்கா கூட்டாண்மையை  மீண்டும் உறுதிப்படுத்தினார் என்றும், சிறிலங்காவின்  பிராந்திய பாதுகாப்புத் தலைமைத்துவத்தை பாராட்டினார் என்றும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தியப் பெருங்கடலை முன்னேற்றுவதற்கான உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடினார் என்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய பிரிவின், எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசவையும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *