ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்- அமெரிக்க உதவி இராஜாங்க செயலருடனும் சந்திப்பு
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
ஐ.நா பொதுச்சபை அமர்வில் பங்கேற்கச் சென்றுள்ள இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று நியூயோர்க்கில் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
சிறிலங்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை இந்த கலந்துரையாடல் மீண்டும் உறுதிப்படுத்தியதாக, அமைச்சர் ஹேரத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கரையும் (Allison Hooker) சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னேற்றுவது குறித்து, இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.