மேலும்

முன்னாள் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்  ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு, உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நீதியரசர்கள் யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு ஒருமனதாக இந்த தீர்ப்பை வழங்கியது.

புதிய  இணைய விசா நடவடிக்கைகளை அங்கீகரித்த அமைச்சரவை முடிவை,  இடைநிறுத்தும்  நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை வேண்டுமென்றே புறக்கணித்ததாக, உயர்நீதிமன்றம் கண்டறிந்ததை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை வழங்கிய நீதியரசர் கோதாகொட, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே புறக்கணித்ததற்காக, இலுக்பிட்டிய குற்றவாளி என்றும்,  இது 2024 ஆம் ஆண்டு 08 ஆம் இலக்க நீதிமன்ற, தீர்ப்பாயம் அல்லது நிறுவனச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும் குறிப்பிட்டார்.

இலுக்பிட்டிய ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை நிராகரித்த போதும்,  பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், அவரது செயல்களை நியாயப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சி அவருக்கு எதிரான தீர்ப்பில், ஒரு தீவிரமான காரணியாகக் கருதப்பட்டது.

ஆரம்பத்தில் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றம் அவர் ஏற்கனவே தடுப்புக் காவலில் கழித்த ஓராண்டைக் கழித்து, தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்து நடைமுறைக்கு  வரும் வகையில் இரண்டு ஆண்டு  சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *