மேலும்

பாதாள உலகத்துக்கு ஆயுதங்களை விற்ற மற்றொரு கொமாண்டோ அதிகாரி கைது

சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி, பாதாள உலக குழுவினருக்கு ஆயுதங்களை விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்ல கொமாண்டோ ரெஜிமென்ட் முகாமைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவரே நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலகத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசகர் எனப்படும், கொமாண்டோ சலிந்தவுக்கு, ரி-56 துப்பாக்கி ரவைகளை விற்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக்காவலில் உள்ள கொமாண்டோ சலிந்தவிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில், வியாழக்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொமாண்டோ சலிந்தவின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த இராணுவ அதிகாரி பல சந்தர்ப்பங்களில் பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்களுக்கு துப்பாக்கி ரவைகளை வழங்கியுள்ளதாக, புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றக் கும்பல்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும்  மேலும் சிறிலங்கா படையினரிடம், விசாரணைகள் நடந்து வருவதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொமாண்டோ சலிந்தவுக்கு ஆயுதங்கள் மற்றும் ரவைகளை வழங்கிய  முல்லைத்தீவு பாலி நகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேணல் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *