சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- அடுத்த வாரம் முடிவு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவர் குறித்து, ஆராய்ந்து வருவதாகவும், அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எதிர்பார்க்கப்படும் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக-
“சபாநாயகர் மீதான நம்பிக்கை இழப்பு குறித்து நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.
அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர்.
அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவை எடுப்போம்.என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சபாநாயகர் தவறினால் அவருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கடந்த வாரம் எச்சரித்துள்ளார்.
