மேலும்

இந்தியாவின் கையில் அங்குசம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான இன்னொரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற முயற்சியில், பிரித்தானியா, கனடா உள்ளிட்ட அனுசரணை நாடுகள் ஈடுபட்டுள்ளன.

ஆனால், சிறிலங்கா அரசாங்கம் அத்தகைய ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுவதை அல்லது வாக்கெடுப்புக்கு விடப்படுவதை தவிர்க்க விரும்புகிறது. தவிர்க்க முடியாவிட்டால், அதனை தோற்கடிப்பதற்கு முயற்சிக்கிறது.

ஏனென்றால், புதிய தீர்மானம் சர்வதேச கண்காணிப்பை – சர்வதேச தலையீட்டை ஏற்படுத்தும் எனக் கருதுகிறது.

இந்த விவகாரத்தில் சர்வதேச தலையீடு அல்லது கண்காணிப்பு தொடர்வதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்க்கிறது.

அதன் அடிப்படையிலேயே 51/1 தீர்மானத்தின் படி உருவாக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை நிராகரித்திருக்கிறது.

புதிய தீர்மான வரைவில் பொறுப்புக்கூறல் செயல்திட்டத்தை அனுசரணை நாடுகள் கைவிட முடியாது.

அரசாங்கத்தின் அழுத்தங்கள் அல்லது நெருக்கடிகளுக்கு பணிந்து அந்த செயல்திட்டம் கைவிடப்படுமானால், அது சிறிலங்காவில் நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகளை மேம்படுத்தும் ஒட்டுமொத்த செயல்முறைக்கும் விழுந்த பேரடியாக இருக்கும்.

நான்கு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட 105,000இற்கும் அதிகமான சான்றுகள், ஆதாரங்களை அது இல்லாமல் செய்யும். அவற்றின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும்.

அவற்றின் பாதுகாப்பு மாத்திரமன்றி அவற்றை வழங்கியவர்களின் பாதுகாப்பும் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

ஏனென்றால் சிறிலங்காவில் ஆட்சிகள் மாறுகின்ற போது என்ன நிலை ஏற்படும் என்று கூற முடியாது.

தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதாக கூறினாலும், இந்த அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுபவர்கள் கடந்த கால அரசாங்கங்களின் கீழும் பணியாற்றியிருக்கிறார்கள். எதிர்காலத்திலும் பணியாற்றப் போகிறார்கள்.

கடந்த கால மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களும் கூட இப்போதைய அரசாங்கத்தின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, இந்த சான்றுகள் ஆதாரங்கள்  அரசாங்கத்தின் கையில் கிடைக்குமேயானால், அதன் பாதிப்பை முழுமையாக எதிர்கொள்ளப் போகிறவர்கள் தமிழர்களே.

எனவே அனுசரணை நாடுகள் குழு தற்போதைய பொறுப்புக்கூறல் செயல்திட்டத்தை தொடர்வதற்கான வழியை எப்படியாவது உருவாக்கியாக வேண்டிய நிலையில் இருக்கின்றது.

எனவே சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கின்ற படி பொறுப்புக்கூறல் செயல் திட்டம் இல்லாத ஒரு தீர்மானத்தை கொண்டு வர அனுசரணை நாடுகளால் முற்பட முடியாது.

அவ்வாறான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டிய அவசியமும் இருக்காது.

ஏனென்றால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பும் அறிக்கைகளுக்காகவும் தான், இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

அது இல்லாத ஒரு தீர்மானத்தை அனுசரணை நாடுகள் கொண்டு வரவோ நிறைவேற்ற வேண்டிய தேவையோ இல்லை.

ஆக அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட போகின்ற தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்குகின்ற வாய்ப்பு இல்லை. எனவே அதனை தோற்கடிப்பதற்கான வாய்ப்பையே பயன்படுத்த முயற்சிக்கும்.

ஜெனிவாவில் கொண்டு வரப்படுகின்ற எந்த ஒரு தீர்மானத்தையும், தோற்கடிப்பதற்கு தென்னாபிரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் ஆதரவு தேவை என, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் பேராசிரியருமான பிரதீப மகாநாமஹேவ தெரிவித்திருக்கிறார்.

மத்திய கிழக்கு, கரீபியன் மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்புடன் புதிய தீர்மானத்தை தோற்கடிக்க முடியும். அதற்கு இந்த மூன்று நாடுகளின் ஆதரவும் தேவை.

இந்த மூன்று நாடுகளும் சிறிலங்காவுக்கு நேரடியாக கடந்த காலங்களில் ஆதரவு வழங்கவில்லை. பெரும்பாலும் நடுநிலை வகித்து வந்திருக்கின்றன.

இந்தநிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை, அனுசரணை நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்துக்கு எதிராக செயல்பட வைப்பது சிறிலங்காவின் முக்கியமான தேவை என அவர் கூறியிருக்கிறார்.

அவரது இந்த கருத்து ஒரு வழி வரைபடத்தை காண்பிக்கிறது. ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மான வரைபை தோற்கடிப்பதற்கு, கையாளுவதற்கான உத்தியை தெளிவுபடுத்துகிறது.

இந்த சூழலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய இந்திய பிரதிநிதியின் கருத்து முக்கியமானதாக உள்ளது.

சிறிலங்காவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையுடன் தமிழ்மக்களின் அபிலாஷைகளான சமத்துவம், நீதி மற்றும் கௌரவத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருவதாக அவர் கூறியிருந்தார்.

அவரது உரையில் மூன்று முக்கியமான விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

ஒன்று -அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டு – மாகாண சபைகளுக்கு உடனடியாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

மூன்று – நாட்டின் அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்பது என்ன என்பதை இந்திய பிரதிநிதி விரிவாக விளக்கவில்லை.

மாகாண சபைகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.

கடந்த 11 ஆண்டுகளாக எந்த ஒரு மாகாண சபைக்கும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இந்தியாவின் அழுத்தங்களுடன் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை செயலிழக்க செய்கின்ற முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்தியா மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை.

2013 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இந்தியா ஏற்பாடு செய்தது.

எனினும் அதற்குப் பின்னரான அரசாங்கங்களிடம், அழுத்தங்களை கொடுத்து தேர்தலை நடத்துவதற்கு இ்ந்தியா முயற்சிக்கவில்லை.

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் எனக் கூறியிருந்தாலும், அதனை நிறைவேற்றுவதற்கான தடைகள் நீக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.

அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்திய பிரதிநிதி கூறியிருக்கிறார்.

இது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற விடயத்தை உள்ளடக்கியது.

13வது திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்த தரப்பு ஜேவிபி. அந்தக் கட்சியே, இப்பொழுது ஆட்சியில் உள்ள சூழலில், 13வது திருத்தச்சட்டம் பற்றி வெளிப்படையாக கருத்து வெளியிட  இந்தியா தயாராக இல்லை.

அதனால் தான், நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தியிருக்கிறது.

அப்படியானால், இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து என்பதே, அதன் அர்த்தம். இதனூடாக அதிகாரங்களை பகிர வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கோரிக்கை.

ஆனால் இந்தியா இதனை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத்தொடரிலும் வெளிப்படுத்துவதால் மாத்திரம் பயனில்லை. அது சிறிலங்காவுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

அந்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாமல் இந்த விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என எதிர்பார்க்க முடியாது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்ட போதும் சரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட போதும் சரி, இந்த மூன்று விடயங்களையும்  தெட்டத் தெளிவாக இந்தியா வலியுறுத்தவில்லை. அது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது.

இப்போது, இந்தியாவின் கையில் அங்குசம் கிடைத்திருக்கிறது. அதனை இந்தியா சரியாக பயன்படுத்தினால் இந்த மூன்று விடயங்களையும் நிறைவேற்றுவது கடினம் அல்ல.

ஜெனிவாவில் அனுசரணை நாடுகள் கொண்டு வரும் தீர்மான விடயத்தில், இந்தியாவின் ஆதரவைப்பெற வேண்டுமானால், சிறிலங்கா அரசாங்கம் இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் இணங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க முடியும்.

அதற்கான வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொண்டால், மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதும் 13 வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதும், அதன் அதிகாரங்கள் பகிரப்படுவதும் சாத்தியமாகலாம்.

ஆனால் மறுபக்கத்தில், ஜெனிவா தீர்மானம் தோற்கடிக்கப்படும். அது பொறுப்புக்கூறல் செயல்முறைகளை பின்னடைவுக்குள் தள்ளும் என்பதையும் மறந்து விடலாகாது.

-கார்வண்ணன்
வழிமூலம்- வீரகேசரி வாரவெளியீடு (14.09.2025)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *