நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் சபாநாயகர்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று கூடிய போது, அவர் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய வடிவத்தில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், வேறு வடிவத்தில் அதனைச் சமர்ப்பிக்கலாம் என்றும் எதிர்க்கட்சியினருக்கு அவர் அறிவித்தார்.
இதுகுறித்து கேள்வி எழுப்புவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனுமதி கோரிய போது சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருவதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார சபையில் அறித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளை சபாநாயகர் மறுத்தால் அவருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.