முன்னாள் அதிபர்களின் சலுகைகளை பறிக்கும் சட்டம் நிறைவேறியது
முன்னாள் அதிபர்களின் உரிமைகள், சலுகைகளை ஒழிப்பதற்கான புதிய சட்டத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இன்று பிற்பகல் இரண்டாவது வாசிப்பின் முடிவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதிபர்களின் உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தன.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மட்டும், அதற்கு எதிராக வாக்களித்தார்.
வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவையில் இருக்கவில்லை.
இரண்டாவது வாசிப்பின் முடிவில், அவைமுதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மூன்றாவது வாசிப்பின் முடிவில், இந்தச் சட்டமூலம் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அதில் கையெழுத்திட்டு அதன் சட்டவலுவை உறுதிப்படுத்தினார்.
இந்தச் சட்டத்தின்படி, முன்னாள் அதிபர்கள் மற்றும் அவர்களது கணவனை இழந்த மனைவி அரச நிதியுதவியுடன் கூடிய வீட்டுவசதி, போக்குவரத்து, ஊழியர்கள் மற்றும் செயலகக் கொடுப்பனவுகளைப் பெறுகின்ற உரிமை முற்றாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர்கள் உயிருடன் இருக்கும் வரை மட்டும் அவர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.