பலாலி விமான நிலையத்தில் 600 மில்லியன் ரூபாவில் புதிய முனையம்
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையக் கட்டடம் கட்டப்படவுள்ளதுடன், ஓடுபாதை விரிவாக்கம் செய்யும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முனையத்திற்கான ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுப்பதற்கான கேள்விப்பத்திர செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்று, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இதற்கென காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், முனையத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க முடியும் என்றும், பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு நம்பிக்கை தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட ஓடுபாதை நீடிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், சாத்திய ஆய்வு நிலுவையில் உள்ளதாகவும், இன்னும் எந்த கொள்முதலும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் குறித்த முந்தைய நிர்வாகத்தின் அணுகுமுறையைப் போலல்லாமல், பலாலி விமான நிலையம் அரசாங்கக் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
