சிறிலங்காவுக்கான வரியை 20 வீதமாக குறைத்தார் ட்ரம்ப்
சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 சதவீதமாக குறைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான வரிகளை அறிவித்திருந்தார்.
அப்போது சிறிலங்கா பொருட்களுக்கு 44 சதவீதம் வரி அறிவிக்கப்பட்டது.
எனினும் இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, சிறிலங்கா பொருட்களுக்கான வரி 30 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை மாதம் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிறிலங்கா பொருட்களுக்கான வரி மேலும் குறைக்கப்பட்டு 20 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மிகப்பெரிய வரிக் குறைப்பு என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.