செம்மணி புதைகுழி: அவசர நடவடிக்கை எடுக்குமாறு உமா குமரன் கடிதம்
செம்மணியில் குறைந்தது மூன்று குழந்தைகளின் எலும்பு எச்சங்கள் அடங்கிய ஒரு கூட்டுப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர நடவடிக்கை எடுக்குமாறு, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச தரத்திற்கு ஏற்ப- புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுப்பதற்கான சிறிலங்காவின் திறன் குறித்து கவலைகளை எழுப்பிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் 2024 ஆம் ஆண்டு அறிக்கையை அந்தக் கடிதத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் மேற்கோள் காட்டியுள்ளார்.
இதுகுறித்து ஒரு சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஆதரவை வழங்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டபடி, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற எனது கோரிக்கையை நீங்கள் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் பிழைத்தவர்களுக்கும், இன்னும் பதில்களைத் தேடும் குடும்பங்களுக்கும், இந்தக் குற்றங்களின் நிழலில் வளரும் அடுத்த தலைமுறைக்கும் நாம் நீதியைப் பெற்றுக் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம் எனவும் உமா குமரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று குழந்தைகளின் உடல்கள் உள்ளிட்ட ஒரு கூட்டுப் புதைகுழி, சிறிலங்காவில் தமிழர்கள் மீது அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது என்றும்,
இந்த கொடூரமான அட்டூழியத்திற்கு சர்வதேச கூட்டாளிகளுடன் சேர்ந்து முழு விசாரணையை ஆதரிக்குமாறும், பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாகவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.