வெளியேற வழியின்றி இஸ்ரேலில் தவிக்கும் இலங்கையர்கள்
வணிக நோக்கங்களுக்காகச் சென்ற இலங்கையர்கள் பலர், விமானங்கள் இல்லாததால் இஸ்ரேலில் சிக்கித் தவிப்பதாக டெல் அவிவ்வில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரானுடனான மோதல் காரணமாக, இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மற்றும் இஸ்ரேலிய வான்வெளி தற்போது அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் மூடப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தூதரக அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும், தேவைப்பட்டால் இஸ்ரேலை விட்டு வெளியேற ஆதரவை வழங்குவதாகவும் இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டார்.
தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, இஸ்ரேலில் இருந்து வெளியேறுபவர்களுக்கு ஈலாட் எல்லை வழியாக எகிப்துக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழைய கட்டடங்களில் முறையான தங்குமிடங்கள் இல்லாமல் வசிக்கும் சில இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளதாகவும் நிமல் பண்டார கூறியுள்ளார்.
தாக்குதல்களின் போது தங்குமிடத்திற்கான தற்காலிக மாற்று வழிகளை அடையாளம் காணவும், தனிப்பட்ட அவசரகால திட்டத்தை உருவாக்கவும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட சமூக சேவையாளர்களை அணுகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், அவசரநிலைகள் ஏற்பட்டால் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் சிறிலங்கா தூதுவர் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.