சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் – ரணில் மீது மர்மப் பொருள் வீச்சு
பிணைமுறி மோசடி தொடர்பாக விவாதிக்க சிறிலங்கா பிரதமரின் கோரிக்கையின் பேரில் இன்று கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் கடுமையான கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
இன்று காலை நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் ஆரம்பமான போது, பிணைமுறி அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் அறிவித்திருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது கூட்டு எதிரணியினர் கூச்சல் குழப்பம் விளைவித்தனர். சபைக்கு நடுவே நின்றபடி கூச்சல் எழுப்பினர்.
இதனால் நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. மீண்டும் நாடாளுமன்றம் கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.
அப்போது கூட்டு எதிரணியினரும், ஜேவிபியினரும். குழப்பம் விளைவித்துக் கொண்டு, அவையில் இருந்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் உரையாற்றிய போதும், சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்த எதிரணியினர் சபையில் இல்லாதால் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க லக்ஸ்மன் கிரியெல்ல கோரினார்.
இதையடுத்து எதிர்வரும் 23ஆம் நாளுக்கு சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
அதேவேளை, இதுதொடர்பாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்-
“இதுபோன்று நாடாளுமன்ற வரலாற்றின் முன்பொரு போதும் நடந்தது இல்லை. காமினி லொக்குகேயே இதனை ஆரம்பித்தார். அவமானகரமானது.
நாடாளுமன்றத்துக்குப் பொருந்தாத அமளி. பி்ரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் ஒரு பொருளை வீசி எறிந்தார். அதைச் செய்தது யார் என்று நான் காணவில்லை. அவமானம்.” என்று கூறியுள்ளார்.