மேலும்

வெள்ளியன்று புதுடெல்லிக்கு பயணமாகிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

tilak marappanaசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வரும் வெள்ளிக்கிழமை புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  கடந்த மாதம் 15ஆம் நாள் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், திலக் மாரப்பன மேற்கொள்ளவுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், அண்மையில் வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்ற பிரசாத் காரியவசமும், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் மற்றும் சில அமைச்சர்களையும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், சிறிலங்கா அதிபர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சில நாட்களுக்கு முன்னரே சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் புதுடெல்லிப் பயணம் இடம்பெறவுள்ளது.

இந்தப் பயணம் குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் கருத்து வெளியிடுகையில் இந்தியாவுடன் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு உறவுகள் நெருக்கமாக உள்ளன. எமது தலைவர்களுக்கு இடையில் மிகச் சிறந்த உறவுகள் இருக்கின்றன. இந்த நிலையில்,  அவர்கள் எல்லா விடயங்கள் குறித்தும் பேசுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்பவர்கள், முதலில் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்வது அண்மைக்கால வழக்கமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *