மேலும்

மகிந்தவின் அரசியல், இந்தியாவுடனான கூட்டமைப்பின் உறவு குறித்து அமெரிக்கா கரிசனை

alice wells- TNA (2)சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் மற்றும் இந்தியாவுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறவுகள் தொடர்பாக அறிந்து கொள்வதில், அமெரிக்கா ஆர்வத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்சுக்கும் இடையில் நேற்றுக்காலை கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, அமெரிக்காவின பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்,  சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.  அது உங்களுக்கு தாக்கம் செலுத்துவதாக உள்ளதா என்ற தொனிப்பட, இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த சம்பந்தன், “புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்களில் மகிந்த ராஜபக்ச கொண்டிருக்கும் புரிதல் தொடர்பாக சில மாறுபட்ட நிலைமைகள் காணப்படுகின்றன.

இருப்பினும் யதார்த்த நிலைமைகளை வெளிப்படுத்துவதற்காகவும் அது தொடர்பில் அவருக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். அண்மையில் கூட அவரை நேரடியாக சந்தித்துள்ளேன்.

அவ்வாறான சந்திப்புக்களை மேலும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றேன்” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, இந்தியாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் தொடர்புகள், தமிழ்நாட்டுடன் கொண்டிருக்கும் உறவுகள் தொடர்பாகவும் அலிஸ் வெல்ஸ் கேள்வி எழுப்பியதாகத் தெரியவருகிறது.

இதற்கு இரா. சம்பந்தன், “இந்திய மத்திய அரசாங்கத்துடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் தமிழ் மக்களின் விடயத்தில் கூடுதல் கரிசனை கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அவர்கள் உணர்வு ரீதியான பேராதரவைக்  கொண்டிருக்கிறார்கள்.” என்று பதிலளித்துள்ளார்.

இதன்போது, குறுக்கிட்ட சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்,தமிழ் நாட்டில் தற்போது அரசியல் சூழலில் மாற்றங்கள் இடம்பெறுகின்றன. விரைவில் அந்த மாற்றங்கள் சாதகமான நிலைமைக்கு நிச்சயமாக மாறும் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச மற்றும் இந்திய விவகாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து அமெரிக்கா கூடுதல் கரிசனை கொண்டிருப்பதை, அலிஸ் வெல்சுடனான சந்திப்பின் போது, கூட்டமைப்பு பிரதிநிதிகளால் உணர முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *