மேலும்

மகிந்த ஆட்சிக்கால மோசடிகளை விசாரிக்க ட்ரயல் அட் பார் நீதிமன்றங்கள்

rajitha-senarathnaமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்க, புதிய மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டார்.

‘முன்னைய ஆட்சிக்கால முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

எனினும், அரசியலமைப்பின் படி சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கு வழியில்லை என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஊழல் மோசடிகளை மேல் நீதிமன்றங்களை புதிதாக அமைத்து, ட்ரயல் அட் பார் முறையில் விசாரணைகளைத் துரிதப்படுத்த முடியும் என்ற யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, மேல் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றில் சிலவற்றை ட்ரயல்  அட் பார் முறையில் விசாரிப்பதற்கு அதிகாரமளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்களுக்கு எதிரான 43இற்கு மேற்பட்ட வழக்குகள், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இரண்டு ஆண்டுகளாக முடங்கிய நிலையில் உள்ளன.

இந்த வழக்குகளை 2020 வரை இழுத்தடிக்கும் மிக நுட்பமாக திட்டமிடப்பட்ட சூழ்ச்சி ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.

2020இல் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு தாமதிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அது நடக்காது.

ட்ரயல் அட் பார் நீதிமன்றங்களை அமைத்தால் நாள்தோறும் விசாரணைகளை நடத்தலாம். ஒரு நாளைக்கு இரண்டு வழக்குகளை விசாரிக்க முடியும். இதன் மூலம் இந்த வழக்குகளைத் துரிதப்படுத்த முடியும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *