மேலும்

கருணா, பிள்ளையான் மீது எந்த நடவடிக்கையும் இல்லை – ஐ.நா அறிக்கையில் அதிருப்தி

karunaமனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக, கருணா மற்றும் பிள்ளையான் மீது இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் 22ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த அறிக்கையில், அடையாள வழக்குகள் என்ற பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களில், கருணா குழு தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கருணா குழு என்ற துணை ஆயுதக்குழுவின் முன்னாள் தலைவரும், முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றியவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கேணல் கருணா அம்மான் என்றும் அறியப்பட்டவர்) 2016 நொவம்பரில், அதிகாரபூர்வ வாகனம் ஒன்றை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

எனினும், கருணா குழுவின் மீது சுமத்தப்பட்டுள்ள  நீதிக்குப் புறம்பான கொலைகள், பலவந்தமாக காணாமலாக்குதல், சிறார்களைப் படையில் சேர்த்தமை உள்ளிட  மனித உரிமை மீறல்கள், தொடர்பாக அவர் இன்னமும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளவில்லை.

கருணா குழுவின் மற்றொரு தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், கருணா குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சிறார் படைச்சேர்ப்பு தொடர்பாக இவர் மீது இன்னமும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *