சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கோருகிறது பிரித்தானியா
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய, பிரித்தானியாவின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தில், ஆசிய,பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
2015 ஒக்ரோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு நாம் காலஅவகாசம் வழங்க வேண்டும். உறுதிநிலை, நல்லிணக்கம், நீதியை நிலைநாட்டுவதற்கு போருக்குப் பிந்திய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
பேரவையில் உரையாற்றிய பின்னர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, பிரித்தானிய அமைச்சர் அலோக் பிரசாத் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போது, உறுதிநிலை, நல்லிணக்கம், நீதியை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய போருக்குப் பிந்திய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.