மேலும்

சிறிலங்காவில் இராணுவப் புரட்சிக்கு அஞ்சுகிறதா அமெரிக்கா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

eagle-flag-usaபோர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் சிறிலங்காவில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும்.  இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது.

இவ்வாறு சிலோன் ருடே ஆங்கில நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாக தூதுவர் ஜி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார். சீனாவானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக இருந்த நிலையில், இதன் பரிந்துரைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்காவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், பிறநாடுகளின் உள்விவகாரங்களில் மற்றைய நாடுகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட மீளிணக்கப் பொறிமுறையானது புதிய பிரச்சினைகளை உருவாக்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு சிறிலங்கா தலைவர்களிடம் சீனத் தூதுவர் அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் நல்லிணக்கம் என்பது சாத்தியமற்ற ஒன்று என இவர் தெரிவித்துள்ளார். அதாவது நாட்டில் சமத்துவமான அபிவிருத்தி முன்னெடுக்கப்படும் போது மாத்திரமே சமூக, அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் இதன் பின்னரே மீளிணக்கம் என்பது வெற்றியடையும் என சீனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலோபாயக் கற்கைகளுக்கான பிராந்திய மையத்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போதே சீனத் தூதுவர் சிறிலங்காவிற்குத் தனது ஆலோசனையைத் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனையைத் தூதுவர் தெரிவிப்பதற்கு முன்னர், இந்தியாவைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை சிறிலங்கா எவ்வாறு அமுல்படுத்துவது என்பது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

இப்பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்கக் கூடாது என்ற கருத்தை மோடி தெரிவித்ததாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டின. மைத்திரி இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்காவிற்குத் திரும்புவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராணுவத் தளபதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பில் வெளிநாட்டு நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணையில் பங்குபெறுவதற்கு அனுமதிப்படமாட்டார்கள் எனவும் இராணுவத் தளபதிகளிடம் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.

இதேவேளையில், சிறிலங்கா அரசாங்கமானது எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் அதேவேளையில் சிறிலங்கா மீதான சீனத் திட்டங்களுக்காக இந்திய-சீன கூட்டு முதலீட்டுப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் தேவையையும் சீனத் தூதுவர் எடுத்துரைத்திருந்தார். இவரது இந்தக் கருத்தானது சிறிலங்காவில் இடம்பெற்ற போர் மீறல்கள் தொடர்பான மேற்குலக நாடுகளின் தலையீட்டைக் குறைப்பதற்கான சீனாவின் மூலோபாயமாக இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

இந்தியா கூட சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்குபெறுவதை எதிர்த்து நிற்கின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் இந்தியா இதையொத்த அணுகுமுறையையே கைக்கொண்டது.

ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அமெரிக்காவால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்நிலையில் இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவாக சிறிலங்கா மீதான போர்க்குற்ற  விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதை இந்தியா விரும்பவில்லை என்பது இங்கு தெளிவாகிறது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவால் லண்டனில் வைத்து உலகத் தமிழர் பேரவையின் தலைவர்களுடனும், வெள்ளைமாளிகையில் சமந்தா பவருடனும் இணைந்து பரிந்துரைகள் தயாரிக்கப்பட்ட அதேவேளையில், இந்தியாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற அறிவுரையை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் ஊடாக ரணில் இப்பரிந்துரைகளில் சில திருத்தங்களை மேற்கொண்டதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை அமெரிக்கா செவிமடுப்பதற்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்த போதிலும் இது தொடர்பில் சமந்தா பவர் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அமெரிக்க மனித உரிமைகள் நிறுவனம் ஒன்றின் மூலம் தகவல் வெளியில் கசிந்துள்ளது.

ஒக்லாண்ட் நிறுவகத்தின் உள்ளக இடப்பெயர்வுக் கண்காணிப்பு மையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வரும் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:

மேற்குலக சார்பு நிலை:

முன்னைய அரசாங்கம் போலல்லாது சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது மேற்குலக சார்புக் கோட்பாட்டைக் கைக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவானது சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்துடன் வர்த்தக உறவைப் பலப்படுத்துவது தொடர்பில் அதிக அக்கறை காண்பித்து வருகின்றமை வெளிப்படை. பெப்ரவரி 2016ல், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் தலைமையில் ‘அமெரிக்க-சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல்’ இடம்பெற்றது. இதில் மகிந்த ராஜபக்சவிற்குப் பின்னான சிறிலங்காவிற்கும் ஒபாமா நிர்வாகத்திற்கும் இடையிலான உறவானது ‘உண்மையான புத்துயிர்ப்பு’ என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கூறியதாக ஒக்லண்ட் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘சிறிலங்காவின் மிகப்பாரிய ஏற்றுமதிச் சந்தையாகத் திகழும் அமெரிக்காவானது சிறிலங்கா மீது ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்துமாறு அழுத்தம் கொடுக்க முடியும். அதாவது அமெரிக்காவானது அனைத்துலக போர்க் குற்ற விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் என அழுத்தங் கொடுப்பதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ள போதிலும் அமெரிக்கா இதனைச் செய்யத் தவறியுள்ளது’ என ஒக்லண்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவானது அனைத்துலக மனித உரிமைகள் நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளையில், மைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அனைத்துலக நீதிபதிகளின் ஊடாக சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டால், மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு எதிராக சிறிலங்கா இராணுவம் பாரியதொரு எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அமெரிக்கா அச்சம் கொள்கிறது.

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் சிலர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, இந்த விசாரணைக்கான ஒத்துழைப்பை சிறிலங்கா இராணுவத்தினர் வழங்கவில்லை. யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீர மற்றும் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு இடையிலான வாக்குவாதம், கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சிறிலங்கா கடற்படை அதிகாரி ஆகியோருக்கு இடையிலான மோதல் ஆகிய இராணுவம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரணை செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதுபோன்றே போர்க்குற்ற விசாரணையின் போதும் சிறிலங்கா அரசாங்கம் பாரியதொரு நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்.

கிழக்கு மாகாண முதலமைச்சர், சிறிலங்கா இராணுவ முகாங்களுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்ட சம்பவமானது இராணுவத்தின் அதிகாரத்துவத்தையும் சிறிலங்கா அரசாங்கத்தின் பலவீனத்தையுமே எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறான சூழலில், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் சிறிலங்காவில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும்.

இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது. இந்தியா தனது எண்ணத்தை உறுதிப்படுத்துவதற்காக சீனாவையும் பயன்படுத்துகிறது. எனினும், வெள்ளை மாளிகையைச் சேர்ந்த சமந்தா பவரின் அதிகாரத்தையும் குறைத்து எடைபோட முடியாது. ஒபாமாவின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் போர்க் குற்றங்கள் தொடர்பான சிறிலங்கா விவகாரம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே சமந்தா பவரின் கருத்தாகும்.

எது எவ்வாறிருப்பினும், சிறிலங்காவானது வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை எதிர்க்க வேண்டும் என இந்தியா, சிறிலங்காவிற்கு ஆலோசனை வழங்கியதா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *