மேலும்

மகிந்தவும் மோடியும் காத்மண்டுவில் சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று பிற்பகல் காத்மண்டுவில் இருதரப்புப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றுள்ள இருநாடுகளின் தலைவர்களும், காத்மண்டுவில் உள்ள விடுதியில், சந்தித்துப் பேசினர்.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதன் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

எனினும், இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவித்ததற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியப் பிரதமர் நரேந்தர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் டுவிட்டரில், இந்தியச் சிறையில் உள்ள சிறிலங்கா மீனவர்களை விடுவிக்குமாறு தாம் இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளிவிவகாரச் செயலர் சுஜாதாசிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்,

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா அதிபரின் இளைய மகன் றோகித ராஜபக்ச ஆகியோரும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *