மேலும்

‘டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சி – சிறிலங்காவுக்கு ஆபத்தை உண்டுபண்ணும்’

Ajith Nivard Cabraalடொலருக்கு எதிராக யப்பான் நாணயமான யென் [Yen] வீழ்ச்சியடைந்துள்ளதானது ஆசியாவின் நாணய ஒழுங்கில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

யென்னின் பெறுமதி வீழ்ச்சியடைவதன் மூலம் சிறிலங்காவால் யென் நாணயப் பெறுமதியில் வழங்கப்பட வேண்டிய கடன்களை மீள வழங்குதல் மற்றும் யப்பானிய உற்பத்திப் பொருட்களை மலிவான விலையில் இறக்குமதி செய்தல் போன்ற குறுகிய கால நலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஆனால் டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியில் வீழ்ச்சியேற்பட்டுள்ளதானது ஏனைய விடயங்களில் ஆபத்தை உண்டுபண்ணும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒக்ரோபர் 31 அன்று யப்பானிய வங்கியானது புதிய நாணய ஊக்கப் பொறிமுறைகளை வெளியீடு செய்ததிலிருந்து டொலருக்கு எதிராக யென்னின் பெறுமதியானது 4.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. யப்பானின் இத்தகைய பொறிமுறையால் ஏனைய நாடுகளும் தமது நாணயப் பெறுமதிகளில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திரு.கப்ரல் நேர்காணல் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாடுகள் தமக்கு எத்தகைய பொறிமுறைகள் நலன் பயக்கின்றனவோ அவற்றை நடைமுறைப்படுத்தும் என்பதை நாங்கள் தற்போது புரிந்து கொள்ள வேண்டும். யென்னின் நாணய இறக்கமானது எவ்வாறான ஆபத்தைத் தோற்றுவித்துள்ளது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும்” எனவும் சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நாணயப் பெறுமதியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியதானது தனது வங்கியின் இரண்டு வீத பணவீக்கத்தை இலக்காகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் யென்னுக்கென சிறப்பான ஒரு முகப்பெறுமதியை வழங்குவதை இலக்காகக் கொண்டதல்ல எனவும் யப்பானிய வங்கி மீண்டும் தெரிவித்துள்ளது.

யென்னின் நாணய இறக்கமானது யப்பானிய நிறுவனங்கள் தமது உற்பத்திகளை மிகக் குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பங்குச் சந்தைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என ஆசியாவைச் சேர்ந்த நிறைவேற்றுத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அச்சம் கொள்கின்றனர். இந்த நிலையானது யப்பானின் வெளிநாட்டு முதலீடுகளைக் குறைத்துக் கொள்வதற்கும் வழிவகுக்கும் என ஆசியாவின் அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் கருதுகின்றனர்.

சிறிலங்காவானது ஏற்றுமதித் துறையில் யப்பானுடன் நேரடியாகப் போட்டியிடுவதில்லை எனவும், ஆனால் யென்னின் பெறுமதி இறக்குமானது வேறு பிரச்சினைகளை உருவாக்கும் எனவும், குறிப்பாக சிறிலங்கா ஆடைகளை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு யப்பான் தனது நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் போது சிறிலங்கா பிரச்சினையைச் சந்திக்க வேண்டியேற்படும் என திரு.கப்ரல் தெரிவித்துள்ளார்.

யப்பானிய வங்கியின் நகர்வானது, யென்னின் வீழ்ச்சியானது ஆசியாவின் அந்நியச் செலாவாணிச் சந்தைகளின் ஊடாக எதிரொலிக்கும் என பந்தயம் கட்டியுள்ள கொரியா, சிங்கப்பூர் மற்றும் இந்திய நாணயங்களில் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்ளத் தூண்டியுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கும் யப்பானுக்கும் இடையிலான மிகவும் வலுவான வர்த்தக மற்றும் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாகவே யென் நாணயப் பெறுமதியானது டொலருக்கு எதிராக வீழ்ச்சியடைவதற்கும் அதிகரிப்பதற்கும் காரணமாகும் எனவும் இதனாலேயே ஆசிய நாடுகளின் நாணயப் பெறுமதி யென்னை முதன்மையாகக் கொண்டுள்ளதாக சில பொருளியிலாளர்கள் கூறுகின்றனர்.

யப்பானால் இவ்வாண்டின் முதல் அரை ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நேரடி அந்நிய முதலீட்டின் கால்வாசியாக 14.8 பில்லியன் டொலர்கள் ஏனைய ஆசிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக யப்பானிய வெளியக வர்த்தக நிறுவனத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் செல்வாக்குச் செலுத்தும் சில சக்திகள் குறிப்பாக சீனாவின் மந்தமடையும் பொருளாதாரமானது ஆசியாவின் வளர்ச்சியில் எதிர்விளைவை ஏற்படுத்தலாம் என தான் கவலை கொள்வதாக திரு.கப்ரல் குறிப்பிட்டுள்ளார். சீனக் கொள்கை வகுப்பாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை அடையாளங் கண்டு அதனைத் தீர்ப்பதற்கும், ஒரு ஆண்டில் ஏழு தொடக்கம் 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குமான வழிவகைகளை ஆராய்வார்கள் என்பதில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு.கப்ரல் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது மந்தமான பொருளாதாரத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தற்போது முதற்தடவையாக சீன மத்திய வங்கி தனது கடன் வீதத்தைக் குறைத்துள்ளதானது உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிறிலங்கா மீதான சீனாவின் பொருளாதார நடவடிக்கையில் மந்தகதி ஏற்பட்டுள்ளது என மக்கள் அச்சப்படுகின்ற அளவுக்கு நிலைமை மோசமானகவில்லை என திரு.கப்ரல் தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் ஆசியாவின் பொருளாதாரத்தில் சிறிலங்காவானது தனியிடம் பிடித்துள்ளதாகவும், சிறிலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டு கால யுத்தமானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுற்றதிலிருந்து அனைத்துலக முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை சிறிலங்காவில் மேற்கொள்வதாகவும் திரு.கப்ரல் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியானது 7.8 சதவீதமாக உள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து சிறிலங்கா மீதான முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை போன்றவற்றில் மேலும் வளர்ச்சி ஏற்படும் எனவும் இதனால் அடுத்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சியானது 8 சதவீதத்தால் அதிகரிக்கும் எனவும் திரு.கப்ரல் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் மீண்டும் அதிபர் தேர்தலை நடாத்துவதற்கான அறிவித்தலை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி வழிமூலம் : AFP By Patrick Barta And Gabriele Parussini
மொழியாக்கம் : நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *