மேலும்

வடக்கில் மாவீரர் நாள் காய்ச்சல் – கெடுபிடிக்குள் யாழ்ப்பாணம்

மாவீரர் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கிலேயே, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்.பல்கலைக்கழக சுற்றுப்புறத்தில் மேலதிகமான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள வீதிகள் வழியாகப் பயணம் செய்யும் வாகனங்களும், பொதுமக்களும், சிறிலங்காப் படையினரால் சோதனையிடப்படுகின்றனர்.

கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழத்தை அண்டிய பிறவுண் வீதி, இராமநாதன் வீதி, பலாலி வீதி, திருநெல்வேலி சிவன் கோவில் வீதி உள்ளிட்டவற்றில் பெருமளவு சிறிலங்கா படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உலாவுகின்றனர்

கலை, விஞ்ஞான பீடங்கள் இழுத்து மூடப்பட்டன

jaffna-universityபல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மற்றும் விஞ்ஞான படத்துக்கு நேற்றிரவு திடீரென விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணமேதும் குறிப்பிடப்படாமல் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.

வரும் 1ம் நாளே இந்தப் பீடங்கள் மீளத் திறக்கப்படும் என்றும், விடுதிகளில் உள்ள மாணவர்களை வெளியேறும் படியும் நேற்றிரவு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாவீரர் நாளை நினைவுகூரல் நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டிலும், மாவீரர் நாளுக்கு முன்னதாகவே யாழ்.பல்கலைக்கழகத்தை நிர்வாகம் இழுத்து மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாவீரர் சுவரொட்டி வைத்திருந்ததாக இளைஞர் கைது

Arrestதென்மராட்சி மீசாலைப் பகுதியில், மாவீரர்நாள் சுவரொட்டியை வைத்திருந்தார் என்று கூறி சிறிலங்காப் படையினரால், இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து மாவீரர் நாள் சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும், இவருடன் தொடர்புடைய மற்றொருவர் தேடப்பட்டு வருவதாகவும், சிறிலங்காப் படையினர் கூறியுள்ளனர்.

வீரசிங்கம் சுலக்சன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், மேலதிக விசாரணைகளுக்காக சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 கார்த்திகைப் பூக்களினால் நெடுந்தீவில் கிலி

karthikai-malarநெடுந்தீவில் மலர்ந்துள்ள கார்த்திகைப் பூக்களினால் சிறிலங்கா கடற்படையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

நெடுந்தீவு முதலாம், இரண்டாம் வட்டாரங்களில், பல இடங்களில் வீதிகளில் கார்த்திகைப்பூக்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து அங்கு சிறிலங்கா கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.

தமிழீழ மாவீரர்களை நினைவு கூரும் கார்த்திகைப்பூக்கள் தற்போது அதிகளவில் பூத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *