மேலும்

ஜெனிவா தீர்மானம் – மீளிணக்கப்பாட்டின் தொடக்கப் புள்ளியாகுமா?

UNHRCசிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதால் கொழும்புடன் தனது உறவைப் புதுப்பித்துக் கொள்வதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காண்பிக்கிறது. இதனாலேயே சிறிலங்காவுடனான தனது கடும்போக்கான நிலைப்பாட்டைக் கைவிட்டுள்ளது.

இவ்வாறு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழில், GORDON FAIRCLOUGH எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற பல்வேறு மீறல்களில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகளும் சட்டவாளர்களும் பங்கெடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கடந்த வியாழனன்று அழைப்பு விடுத்திருந்தது.

சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த இரு சாராரும் அதிர்ச்சியூட்டத்தக்க பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டனர் என கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதைகள்  மற்றும் பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் போன்ற பல்வேறு மீறல்கள் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் கடந்த வாரம் கூடிய 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மனித மனித உரிமைகள் பேரவையால் சிறிலங்கா தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானமானது அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்டது. எனினும் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மீதான நம்பிக்கையில் அமெரிக்கா தனது கடும்போக்கைத் தளர்த்திக் கொண்டதுடன், தீர்மான வரைவில் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டது.

சிறிலங்கா மீதான விசாரணையில் ‘நம்பகமான நீதிசார் நடவடிக்கையை’ உறுதிப்படுத்துவதற்காக அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பும் இதில் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் பேரவை வலியுறுத்தியிருந்தது. அத்துடன் சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்களை வெளிக்கொணர்வதற்கான நடவடிக்கையை சிறிலங்கா முன்னெடுக்க வேண்டும் எனவும் இதனை ஐ.நா மனித உரிமைகள் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் பேரவை அறிவித்தது.

‘தனது நாட்டு மக்கள் சந்தித்த மிகப் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளை விசாரணை செய்து தக்க தண்டனை வழங்குவதற்கான ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு வாய்ப்பாக இது காணப்படுகிறது’ என ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் பேச்சாளர் றவீனா சம்தாசனி தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு அனைத்துலக சார் தலையீட்டைத் தனது நாட்டில் பெரும்பான்மையாக வாழும் பௌத்த சிங்களவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள் என்பதால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை மேற்கொள்வது தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நகர்வுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்களை வினைத்திறனுடன் விசாரணை செய்வதற்கான இயலுமையை சிறிலங்கா கொண்டிருக்கவில்லை என்பதால் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என சில மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்துள்ளன.

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கான புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதால் கொழும்புடன் தனது உறவைப் புதுப்பித்துக் கொள்வதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காண்பிக்கிறது. இதனாலேயே இது சிறிலங்காவுடனான தனது கடும்போக்கான நிலைப்பாட்டைக் கைவிட்டுள்ளது.

இந்திய மாக்கடலில் சிறிலங்காவானது கேந்திர முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு நாடாகும். அத்துடன் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுடனான உறவு மிகவும் நெருக்கமாகியிருந்தது. இதன் பெறுபேறாக கடந்த ஆண்டு இரண்டு தடவைகள் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கான அனுமதியை சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் வழங்கியிருந்தது.

‘சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் முன்வைத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுமா அல்லது இல்லையா என்பதை நாங்கள் பொறுத்திருந்து அவதானிக்க வேண்டியுள்ளோம்’ என தென்னாசியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

2009ல் சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து சில ஆண்டுகள் கடந்தபோதிலும் போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் தலையீட்டுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு ராஜபக்ச முற்றிலும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தல் மூலம் ராஜபக்ச பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு, மைத்திரிபால சிறிசேன புதிய அதிபராக மக்களால் தெரிவு செய்யப்பட்டார். இவர் தனது தேர்தல் பரப்புரையின் போது நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதாகவும் தமிழ் சமூகத்திற்கும் நாட்டின் பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் இடையிலான உறவை சுமூகமாக்குவதாகவும் உறுதி வழங்கியிருந்தார்.

‘கடந்த  பத்தாண்டாக சிறிலங்காவில் வாழும் தனிமனித உரிமைகள் மீறப்பட்டிருந்தன. சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதானது, சிறிலங்காவில் நிலவிய மீறல் கலாசாரம் முடிவிற்கு வந்துள்ளதையே சுட்டிக்காட்டுகிறது’ என ஜெனீவாவிலுள்ள சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் மீளிணக்கப்பாட்டையும் அபிவிருத்தியையும் மேற்கொள்வதை முன்னுரிமைப்படுத்துவதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் எந்தவொரு பாரியளவிலான மீறல்களும் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பில் ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை பக்கச்சார்பானது எனவும் ராஜபக்சவும் அவரது உயர் அதிகாரிகளும் தமது ஆட்சிக்காலத்தின் போது அறிவித்திருந்தனர்.

‘நாட்டில் சில மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் முழு இராணுவமும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என நியாயப்படுத்த முடியாது’ என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரர்களில் ஒருவரும் பாதுகாப்புச் செயலராகக் கடமையாற்றியவருமான கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார்.

போரில் ஈடுபட்ட சிறிலங்கா அரசாங்கப் படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பல்வேறு மீறல்களில் ஈடுபட்டதுடன் அனைத்துலக சட்டத்தையும் மீறியிருந்தனர் என்பதை உறுதிப்படுத்தும் பல்வேறு சாட்சியங்களை ஐக்கிய நாடுகளின் வல்லுனர்கள் முன்வைத்திருந்தனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘பாதுகாப்பு வலயங்களில்’ தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர் என்பதை ஐ.நா வல்லுனர்களின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போரின் இறுதியில் சரணடைந்த புலி உறுப்பினர்கள் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இறுதியில் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் ஐ.நா வல்லுனர்களின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரில் பங்கெடுத்த தமிழ்ப் புலிகளும் பல மீறல்களில் ஈடுபட்டதாகவும் இவர்கள் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள், கண்ணிவெடித் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் போன்றவற்றில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சிறுவர்களைப் பலவந்தமாகப் படையில் இணைத்தமையும் புலிகளால் இழைக்கப்பட்ட மீறலாக உள்ளதாகவும் ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘சிறிலங்கா தொடர்பான ஐ.நா தீர்மானமானது போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் திருப்திப்படுத்துவதாக வரையப்படவில்லை. ஆனால் இத்தீர்மானமானது தொலை தூரத்திலுள்ள மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *