மேலும்

கடாபியின் தோளில் நான் கைபோடவில்லை – மறுக்கிறார் மகிந்த

mahinda-gaddafiதாம் லிபிய அதிபராக இருந்த முவம்மர் கடாபியின் தோளில் கைபோடவில்லை என்றும், அவர் தனது தோளில் கைபோட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார் சி்றிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அனைத்துலக சமூகத்தினால் ஓரம்கட்டப்பட்ட கடாபியின்  தோளில் கைபோட்டுக் கொண்டு ஒளிப்படம் எடுத்தவர்களால், அனைத்துலக ரீதியாக சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“லிபிய அதிபர் முவம்மர் கடாபியின் தோளில் கையைப் போட்டிருந்ததால் தான், மேற்குலக நாடுகள் சிறிலங்காவுடன் விலகியிருந்தன என சிலர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கூறப்படும் ஒளிப்படத்தில், எனது தோளில் தான் கடாபி கைபோட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு போரின் இறுதி மாதங்களில், சிறிலங்காவின் வெளிநாட்டு நிதிக் கையிருப்பு வேகமாக கரைந்து போனது.

நிதியை வழங்குவதை இழுத்தடிக்குமாறு மேற்குலக நாடுகள், அனைத்துலக நாணய நிதியத்துக்கு அழுத்தம் கொடுத்தன.

அப்போது எனது ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்றுக் கொண்டு, சிறிலங்காவுக்கு 500 மில்லியன் டொலரை முவம்மர் கடாபி வழங்கினார்.

அப்போது அந்த உதவி கிடைத்திராது போயிருந்தால், போர் வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்னர், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கும்.

போரை நிறுத்துவது குறித்து பேச்சு நடத்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எட் மில்லிபான்டும், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கோச்னரும், சிறிலங்கா வந்த போது எம்பிலிப்பிட்டிய பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மரவள்ளிக்கிழங்கை சாப்பிடக் கொடுத்து அனுப்பினோம் என்றும் கூறினர்.

போரின் இறுதிக்கட்டத்தில், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு எனக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வருகை தந்த பிரித்தானிய, பிரெஞ்சு அமைச்சர்களுக்கு  என்ன உணவு வழங்கப்பட்டது என்பது எனக்குத் தற்போது ஞாபகத்தில் இல்லை.

ஆனால், போரை நிறுத்துவதற்கு நான் மறுத்தேன் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

வெளிநாட்டின் துன்பங்களுக்கு நான் அடிபணியாததால் தான், நாம் இன்று பயங்கரவாதம் இல்லாத நாட்டில் வாழ்கின்றோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *