மேலும்

ஐரோப்பிய ஒன்றியம் கூற முன்னரே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மையப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிப்பதற்கு முன்னரே, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில்  இன்று இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட  விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பை தொடர்ந்து ஆட்சிக்கு  வந்த ரணில் விக்கிரமசிங்க, 2048ஆம் ஆண்டு வரையில், பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது,  2048 இற்கு பின்னரே  நாட்டின் பொருளாதாரம் தலைதூக்கும்.

அது வரையில் அரச சேவையாளர்களுக்கு  சம்பளத்தை அதிகரிக்க முடியாது. வீதிகளை நிர்மாணிக்க பணம் இல்லை. தேர்தலை நடத்த பணம் இல்லை என்றெல்லாம் குறிப்பிட்டார்.

சிறிலங்கா பொருளாதார ரீதியில் மட்டுமன்றி அரசியல் ரீதியிலும் வங்குரோத்தடைந்த நாடாகவே இருந்தது. அவ்வாறான நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். நாட்டை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் மாற்றங்களை ஏற்படுத்தி பயணிக்கின்றோம்.

இதுவரையில் மூன்று வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளோம். அவற்றை பார்த்தால் எமது கொள்கைத் திட்டம், எமது இலக்கு போன்றவை தெளிவாக இருக்கும்.

வங்குரோத்தடைந்திருந்த நாட்டை கட்டம் கட்டமாக எவ்வாறு கட்டியெழுப்புவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களுக்கு அனைத்துலக நாணய நிதியத்துடன் சில இணக்கப்பாட்டுக்கு செல்ல நேரிட்டது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டுள்ளோம்.

முதற் தடவையாக சிறிலங்கா வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக 2024 டிசம்பரில் முழு உலகமும் ஏற்றுக்கொண்டது.

எமது பொருளாதாரம் தொடர்பில் உலகம் முழுவதும் நம்பிக்கை ஏற்பட்டது. எமக்கு மீண்டும் கடன் வழங்க பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் முன்வந்தன.

எமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றன எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எங்களுடன் கைகோர்த்துள்ளது.

எங்களுக்கு இன்னும் முன்னால் போக வேண்டியுள்ளது. அதற்கு ஏற்ற வரவு செலவுத் திட்டமே இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில்  வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தது. அனைத்துலக நாணய நிதியம் வழங்கிய இலக்கானது 3275 பில்லியன் ரூபாவாக இருந்தது. அந்த இலக்கை அடையமாட்டோம்  என்றே சர்வதேச நாணய நிதியம் நினைத்தது.

ஆனால்  வரிவருமானத்தை 4252 பில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ளோம். இந்த ஆண்டு  முதல் 9 மாதங்களில் எமது அரச வருமானத்தை 20.1 வீதத்தால் அதிகரித்துள்ளோம்.

அரச நிதி முகாமைத்துவம், வீண் செலவுகளை கட்டுப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஊடாகவே அதனை செய்ய முடிந்தது.

சுங்கத் திணைக்களம்,இறைவரித் திணைக்களம், வருமான வரித் திணைக்களம் என்பன பொருளாதாரத்தில் இதயமாகும். இந்த இதயம் கடந்த காலங்களில் இயங்கவில்லை. இரத்த ஓட்டம் இருக்கவில்லை.

ஆனால் நாங்கள் வந்து குறுகிய காலத்தில் அந்த இதயத்தை இயங்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இதன்மூலமே அரச வருமானம் அதிகரித்துள்ளது.

இந்த மாற்றங்கள் மூலமே நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து சில வரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுற்றுலாத்துறையில் சில வரிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை வெளிநாடுகளில் வாழும்  இலங்கையர்களே நாட்டுக்கு அதிகளவில் பணம் அனுப்புகின்றனர். கடந்த ஆண்டில் 8.1 பில்லியன் டொலர் அனுப்பியுள்ளனர். இதுவே அதிகளவில் அனுப்பப்பட்ட தொகையாகும்.

இந்த ஆண்டில் அந்த இலக்கு 9 பில்லியன் டொலராக வரும். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே அதிகளவில் பணம் அனுப்புகின்றனர்.

இவர்களுக்கு தேவையான நிவாரணங்களை நாங்கள் வழங்குகின்றோம். பொருளாரத்தில் பலமடையும் போது அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம்.

ஜி.எஸ்.பி வரிச் சலுகை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் மாதம்  முடிவடைந்த இருந்த நிலையில் அது நீடிக்கப்பட்டுள்ளது.

2017இல் இது தொடர்பில் நிபந்தனையொன்று விதிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று இருந்தது.

ஆனால் நாங்கள் ஏற்கனவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய அந்த சட்டத்தை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பின்னர்  நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இதனால் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்காமல் புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டியிருந்தது.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள விடயங்கள் புதிய சட்டத்தில் கிடையாது. ஒடுக்குமுறை சட்டத்தின் மூலம் அரசாங்கம் செயற்படக்கூடாது.

ஜனநாயகம்,மனித உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு பூகோள பயங்கரவாத சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்  பயங்ககரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள திருத்தங்களை செயற்படுத்துவோம்.

என்றாவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதன்போது நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலேயே இந்தச் சட்டத்தை கொண்டு வருகின்றோம்.

அதேபோன்று பாதாள குழுக்கள் மற்றும் போதைப் பொருளை இல்லாமல் செய்யும் வகையிலேயே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

ஜி.எஸ்.பி பிளஸ் நீங்குவதால் இல்லாமல் போகும் பொருளாரத்தை விடவும், போதைப் பொருளால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் அதிகம்.

இதனால் நாங்கள் முறையான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகின்றது. என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *