மேலும்

நல்லிணக்கத்தை நோக்கி அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும்- றொபேர்ட் ஓ. பிளாக் 

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றம், சிறிலங்காவின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுடன் சேர்த்து, மனித உரிமைகள் பதிவுகள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ. பிளாக்  எச்சரித்துள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் உள்ள ‘கொழும்பு கிளப்’பில், ‘பாத்பைண்டர் பவுண்டேசன்’ ஏற்பாடு செய்திருந்த “அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் மற்றும் தெற்காசியாவின் மாற்றங்கள்: சிறிலங்கா மற்றும் பிராந்தியத்திற்கான தாக்கங்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில், இணைய வழியில் உரையாற்றிய போதே றொபேர்ட் ஓ. பிளாக் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம், வொசிங்டனுக்கான புதிய சிறிலங்கா தூதுவரை தாமதமின்றி நியமிக்க வேண்டும்.

ஊழலை ஒழிப்பதற்கு அரசாங்கம் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறதோ, அதே அளவிலான முக்கியத்துவத்தை மனித உரிமைகள் சீர்திருத்தங்களுக்கும் வழங்க வேண்டும்.

அமெரிக்காவுடன் தீவிரமாகச் செயற்படக் கூடிய ஒரு தூதுவர் சிறிலங்காவுக்குத் தேவை.

அமெரிக்காவின் புதிய நாடாளுமன்றம், அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளின் மனித உரிமைகள் பதிவுகளை மிகவும் கூர்ந்து கவனிக்கக் கூடும்.

ஊழலை ஒழிப்பதில் அதிபர் திசாநாயக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள  அதேவேளை, அனைத்துலக அரங்கில் சிறிலங்காவின் நற்பெயரை மேம்படுத்தவும், முன்னுரிமை வர்த்தக அணுகலைப் மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்தவும், அரசியல் ரீதியாகச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படுவது ஒரு முன்னுரிமை நடவடிக்கையாகும்.

நான் அமெரிக்கத் தூதுவராக இருந்த காலத்திலிருந்தே தீர்க்கப்படாமல் இருக்கும் நீண்டகாலப் பிரச்சினை இது.

நல்லிணக்கத்தை நோக்கி அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ இருப்பைக் குறைத்தல், நிலங்களைத் திருப்பி ஒப்படைத்தல் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’ என்றும் றொபேர்ட் ஓ பிளாக் குறிப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *