சுரேஷ் சாலேவுக்கு உளவியல் பாதிப்பு – உயிரை மாய்க்கும் ஆபத்து உள்ளதாம்
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே, அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு , பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டவாளர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சார்பில், முன்னிலையான அதிபர் சட்டவாளர் ஷவிந்திர பெர்னாண்டோ, தனது கட்சிக்காரரை சட்ட மருத்துவ அதிகாரி பரிசோதித்ததாகவும், மருத்துவ அறிக்கையின்படி அவர் திர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு, பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், மருத்துவ அறிக்கையில் தனது கட்சிக்காரரின் உடலில் ஐந்து இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, சுரேஷ் சாலே கடுமையான உளவியல் ரீதியான துன்பத்திற்கு ஆளாகியுள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனது கட்சிக்காரரின் தற்போதைய மனநிலையால், அவர் உயிரை மாய்க்கும் அபாயம் ஏற்படக்கூடும் என்பதை மருத்துவ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாகவும், சட்டவாளர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கட்சிக்காரரின் தற்போதைய நிலை மற்றும் சிகிச்சை குறித்து உரிய வழிகாட்டுதல்களைக் கோருவதாகவும் அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நீதிவான், அரச தரப்பின் நிலைப்பாட்டைக் கேட்டறியாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இந்த மனு மீது வாதங்களை முன்வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு நீதிவான் கட்டளையிட்டதுடன், இந்த வழக்கை நாளை பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
