அவதூறு முறைப்பாடுகளை சிறிலங்கா காவல்துறை ஏற்கக் கூடாது
சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு போன்ற புலனாய்வு நிறுவனங்கள், அவதூறு தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கக்கூடாது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் இணையம் உட்பட பல்வேறு ஊடக தளங்களில் தங்களைப் பற்றி வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான அல்லது அவதூறான அறிக்கைகள் குறித்து, குற்றப் புலனாய்வுப் பிரிவ அல்லது கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட, சிறிலங்கா காவல்துறையின் சிறப்புப் பிரிவுகளிடம் முறைப்பாடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளதன் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்றச்சாட்டாகக் கூறப்படும் அவதூறு அறிக்கைகள்” ஒரு குற்றவியல் குற்றமாகக் கருதப்படாததால், இந்தப் பரிந்துரை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய்யான அறிக்கைகள் அல்லது அவதூறு சிறிலங்காவில் “குற்றங்கள்” அல்ல என்றும், இதுபற்றி காவல்துறைமா அதிபர் அனைத்துப் பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அவதூறு அறிக்கைகள் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் விசாரணைகளை நடத்துவதன் மூலம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இணையப் பாதுகாப்பைத் தடுக்கும் போக்கு இருப்பது கவனிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகளை வெளிப்படுத்துவதும் அதன் மூலம் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பதும் அனைத்து குடிமக்களுக்குமான ஒரு முக்கியமான அடிப்படை உரிமை என்றும், இந்த உரிமை உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்கும் உரிமையின் மீது தேவையற்ற, நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது சமூகத்திற்கு கடுமையான ஆபத்து என்றும், அத்தகைய கட்டுப்பாடுகள் மக்களிடையே அதிருப்தியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளின்படி, அரசியல் தலைவர்கள் மற்றும் பொது அதிகாரிகள் போன்ற பொது பிரதிநிதிகள், தனிநபர்களை விட அதிகம் விமர்சனங்களை சகித்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்தகைய நபர்கள் பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டிய சிறப்புப் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்றும், எனவே, கூறப்படும் அவதூறான அறிக்கைகளை விசாரிக்க சட்ட த்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளை அதிகமாக நம்பியிருக்கக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் பொருத்தமான விதிகளுடன் ஒரு புதிய சட்டத்தால் மாற்றப்படும் வரை, நீதி அமைச்சு அதனை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
கருத்துக்கள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் என்பது இணையத் தளங்கள் உட்பட எந்தவொரு ஊடகம் மூலமும் செய்யப்படும் அனைத்து வகையான வெளிப்பாடுகளையும் உள்ளடக்கியது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
