சந்தியா எக்னெலிகொடவுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர்
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சந்தியா எக்னெலிகொடவுக்கு ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் ஒருவரினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர், தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம், வலியுறுத்தியுள்ளார்.
ஜனவரி 16 ஆம் நாள், 0751679672 என்ற அலைபேசி எண்ணிலிருந்து, தனக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அழைப்பாளர் தன்னை அமைதியாக இருக்குமாறும், இல்லையெனில் கணவரைப் போன்ற நிலையையே எதிர்கொள்ள நேரிடும் என்றும் மிரட்டியதாகவும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
என் கணவருக்கு நீதி கேட்டு நான் போராடி வருவதால், கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு நபர்களிடமிருந்து எனக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன. ஆனால் இந்த அழைப்பு என்னை பயமுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அச்சுறுத்தல் முந்தைய ஆட்சியின் போது வந்திருந்தால், எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் வருவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பிரகீத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு இராணுவத்தால் பதவி உயர்வு வழங்கப்பட்டதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தேன்.
வாகன விபத்து அல்லது அதுபோன்ற வழியில் கூட நான் கொல்லப்படலாம். அது நடப்பதற்கு முன்னர் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், அவர்கள் எனக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
கொலை மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து, சந்தியா எக்னெலிகொட சிறிலங்கா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதுடன், சிறிலங்கா காவல்துறையின் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் உதவி மற்றும் பாதுகாப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பணியகம் (OHCHR) போன்ற அனைத்துலக அமைப்புகளுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
எனினும், சந்தியாவின் கடிதத்திற்கு சிறிலங்கா அதிபரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
தொலைபேசி எண் பதிவு செய்யப்படாத எண் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை சில தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்றும் சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.
