கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கு அமெரிக்க கடற்படை நிபுணர்கள் பயிற்சி
இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு விடயங்களை கையாளுவது தொடர்பாக அமெரிக்க கடற்படையின் வெடிபொருள் அகற்றும் நிபுணர்கள் சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினருக்கு பயிற்சியளித்துள்ளனர்.
இந்த வாரம் இந்தப் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆபத்துகளை விரைவாக அடையாளம் காண்பதற்கான, அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கான, துறைமுகத் தொழிலாளர்களையும் சுற்றியுள்ள சமூகங்களையும் பாதுகாப்பதற்கான தீயணைப்பு வீரர்களின் திறனை பலப்படுத்துவதன் மூலம், பிராந்தியத்தின் முக்கிய கடல்சார் மையங்களில் ஒன்றான கொழும்புத் துறைமுகத்தில் இடையூறுகளைத் தடுப்பதற்கு இந்தப் பயிற்சி உதவுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து, மீண்டெழும் தன்மையுடைய விநியோகச் சங்கிலிகள் மற்றும் உறுதித்தன்மை ஆகியவற்றிற்கு இது உதவியாக இருக்கும் என்றும், அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.


